விபத்துகளை தடுக்கக்கோரி, கிராம மக்கள் சாலை மறியல் - மயிலம் அருகே பரபரப்பு


விபத்துகளை தடுக்கக்கோரி, கிராம மக்கள் சாலை மறியல் - மயிலம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 9 Jan 2020 10:45 PM GMT (Updated: 10 Jan 2020 12:30 AM GMT)

மயிலம் அருகே விபத்துகளை தடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மயிலம்,

மயிலம் அடுத்த திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செண்டூர் பஸ் நிறுத்தம் அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பஸ் நிறுத்தம் அருகே விபத்துகளை தடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செண்டூர் பஸ் நிறுத்தம் அருகே ஏற்பட்ட விபத்தில் சென்னகுணத்தை சேர்ந்த ஜவுளிக்கடை ஊழியர் சீனிவாசன் உள்பட 2 பேர் பலியானார்கள். அதேபோல் நேற்று முன்தினம் இரவு அதே இடத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் செண்டூரை சேர்ந்த வளர்மதி, ரவி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செண்டூர் பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்று வரும் தொடர் விபத்துகளை தடுக்க ஏதுவாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சர்வீஸ் சாலை வசதியுடன் மேம்பாலம் அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியல் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கிராம மக்கள் நேற்று மதியம் 12 மணியளவில் செண்டூர் பஸ் நிறுத்தத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தொடர் விபத்துகளை தடுக்க ஏதுவாக செண்டூரில் புதிதாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கண்டன கோ‌‌ஷங்களை எழுப்பியபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி மற்றும் மயிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், நடராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செண்டூரில் விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story