அரசு பள்ளிகளில் ஓவிய பாடம் தொடங்க நடவடிக்கை; பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பேச்சு


அரசு பள்ளிகளில் ஓவிய பாடம் தொடங்க நடவடிக்கை; பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பேச்சு
x
தினத்தந்தி 10 Jan 2020 11:45 PM GMT (Updated: 10 Jan 2020 7:58 PM GMT)

அரசு பள்ளிகளில் ஓவிய பாடம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ் குமார் கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக சித்ரகலா பரிஷத் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி தொடக்க விழா சித்ரகலா பரிஷத் கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ் குமார் கலந்து கொண்டு ஓவிய கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

குழந்தைகளின் கற்றலில் இலக்கியம், இசை, இயற்கை, ஓவியம் போன்றவை மிக அவசியம். பள்ளி குழந்தைகள் வெறும் மதிப்பெண்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் மேற்கண்ட கலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு பெற்றோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஆசிரியர் ஒருவர் பக்கவாட்டு எலும்பு என்று சொல்லி கொடுக்கிறார். ஆனால் குழந்தைகள் அதை சரியாக உச்சரிக்கவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. குழந்தைகளுக்கு சரியான முறையில் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையிடமும் தனித்தன்மை மற்றும் திறன் அடங்கியுள்ளது.

அவற்றை வெளியே கொண்டு வருவது ஒவ்வொருவரின் கடமை.

வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்க ஓவியம் போன்ற கலைகளை கற்க வேண்டியது அவசியம். ஓவியத்திற்கு என்று தனி பாடம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சுரேஷ்குமார் பேசினார்.

அதைத்தொடர்ந்து பேசிய கர்நாடக சித்ரகலா பரிஷத் ஆசிரியர்கள் சங்க தலைவர் ராமப்பா, "1-ம் வகுப்பு முதல் பி.யூ.சி. 2-ம் ஆண்டு வரை குழந்தைகளுக்கு ஓவிய கல்வி போதிக்கப்பட வேண்டும். ஓவியத்திற்கு என்று தனியாக ஒரு பாடத்தை தொடங்க வேண்டும். ஓவிய கல்வியை கட்டாயப்படுத்த வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் ஓவிய ஆசிரியரை நியமிக்க வேண்டும. மாநில அரசு சார்பில் ஓவிய கல்லூரியை தொடங்க வேண்டும்’’ என்றார்.

Next Story