திருப்பூரில் இந்திய மருத்துவ சங்க முப்பெரும் விழா; மாவட்ட நீதிபதி அல்லி பங்கேற்பு


திருப்பூரில் இந்திய மருத்துவ சங்க முப்பெரும் விழா; மாவட்ட நீதிபதி அல்லி பங்கேற்பு
x
தினத்தந்தி 10 Jan 2020 11:14 PM GMT (Updated: 10 Jan 2020 11:14 PM GMT)

திருப்பூரில் இந்திய மருத்துவ சங்க முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட நீதிபதி அல்லி கலந்து கொண்டு பேசினார்.

அனுப்பர்பாளையம், 

இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளை சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம், 2019-ம் ஆண்டின் சங்க நிர்வாகிகளுக்கு நன்றி அறிவித்தல் மற்றும் 2020-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஆகிய முப்பெரும் விழா திருப்பூர் கணியாம்பூண்டியில் உள்ள சங்க கட்டிடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் சி.என்.ராஜா தலைமை தாங்கினார்.

திருப்பூர் கிளை பொருளாளர் டாக்டர் ரமேஷ் வரவேற்றார். செயலாளர் டாக்டர் ராஜ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். கவுரவ விருந்தினர்களாக திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன், சங்க மாநில செயலாளர் ரவிக்குமார், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் கார்த்திகேயன், மேற்கு மண்டல துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

துணை தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி வாழ்த்தி பேசினார். உடனடி முன்னாள் தலைவர் டாக்டர் செந்தில்குமரன் 2019-ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். சங்கத்தின் 2020-ம் ஆண்டிற்கான புதிய தலைவராக டாக்டர் பழனிசாமி உள்பட நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட நீதிபதி அல்லி சிறப்பாக செயல்பட்ட டாக்டர்களுக்கு கேடயங்கள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை சமுதாயத்திற்கு பயன்படுத்தினால் மட்டுமே அதை வளர்ச்சியாகவும், வெற்றியாகவும், முன்னேற்றமாகவும் கருத முடியும். அந்த வகையில் திருப்பூர் இந்திய மருத்துவ சங்கம் சமுதாய பணிகளை மிக சிறப்பாக செய்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்ற டாக்டர் பழனிசாமி பேசுகையில், இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளை சார்பில் இந்த ஆண்டு அனைத்து மருத்துவர்களின் பங்களிப்புடன் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்குவதற்கான திட்டம் தொடங்கப்பட உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடமாடும் இலவச மருத்துவ பரிசோதனை குழு செயல்படும் என்றார்

முடிவில் சங்க துணை செயலாளர் டாக்டர் பொம்முசாமி நன்றி கூறினார். இதில் சங்கத்தின் மத்திய, மாநில குழு உறுப்பினர்கள் உள்பட டாக்டர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் சி.என்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய மருத்துவ சங்கம் அரசுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சங்கத்தின் திருப்பூர் கிளை சார்பில் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து மிக முக்கிய ஒரு திட்டமான ரத்த வங்கியை தொடங்க உள்ளனர். மேற்கு மண்டலத்தில் ஏற்கனவே கோவை, உடுமலை, சத்தி உள்ளிட்ட 3 இடங்களில் ரத்த வங்கி திறக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 4-வது ரத்த வங்கியாக திருப்பூரில் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது.

போலி மருத்துவர்கள் தொடர்பான சட்ட வரைவு திட்டத்தை இந்திய மருத்துவ சங்கம் தயார் செய்து, அதை அரசிடம் வழங்க உள்ளோம். தமிழக அரசு சட்டமன்றத்தில் இதை தனி சட்டமாக கொண்டு வந்து போலி மருத்துவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story