மதுரை பெண் கொலை: கணவனே கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலம் - மேலும் 4 பேர் சிக்கினர்


மதுரை பெண் கொலை: கணவனே கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலம் - மேலும் 4 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 10 Jan 2020 11:48 PM GMT (Updated: 10 Jan 2020 11:48 PM GMT)

மதுரையில் பாத்திரக்கடை அதிபர் மனைவி கொலையில் கணவனே கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமானது. இந்த வழக்கில் மேலும் 4 பேர் சிக்கினர்.

மதுரை, 

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலை, பாரதி உலா வீதியை சேர்ந்தவர் மாரியப்ப நாடார், பிரபல பாத்திரக்கடை அதிபர். இவரது மனைவி சீனியம்மாள்(வயது 58). இவர்களுக்கு 2 மகள்களும், குமரகுரு(35) என்ற மகனும் உள்ளனர். 2010-ம் ஆண்டு மாரியப்ப நாடார் மறைவுக்கு பின்னர் அவரது கடையை மனைவியும், மகனும் கவனித்து வந்தனர்.

குமரகுருவிற்கு லாவண்யா என்பவருடன் திருமணம் முடிந்து 2 மகள்கள் உள்ளனர். இவர் தனது தாயாருடன் அதே வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு லாவண்யா வீட்டின் உள்ளே உள்ள முதல் தளத்தில் 2 மகள்களுடன் படுத்திருந்தார். தரைதளத்தில் உள்ள ஒரு அறையில் குமரகுருவும், ஹால் பகுதியில் சீனியம்மாளும் படுத்திருந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் 2 மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் நேராக முதல் தளத்திற்கு சென்று அங்கு படுத்திருந்த லாவண்யாவை சரமாரியாக கத்தியால் குத்தினர். சத்தம் கேட்டு எழுந்து அவர்களது மூத்த மகள் புண்யா தனது கண் எதிரே தாயாரை 2 பேர் கத்தியால் குத்துவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பதற்றத்துடன் கீழே வந்து பாட்டியிடம் நடந்த விஷயத்தை கூறினார்.

பின்னர் மர்மநபர்கள் கீழே இறங்கி வந்த போது சீனியம்மாள் அவர்களை தடுத்து நீங்கள் யார் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் அவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி விட்டனர்.

இதற்கிடையில் சத்தம்கேட்டு குமரகுரு வெளியே வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் தாயார் கீழே கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் மாடியில் உள்ள அறையில் லாவண்யாவும் குத்தப்பட்டு கிடப்பதை அவரது மகள் அழுது கொண்டே தெரிவித்தார். உடனே அவர் மாடிக்கு சென்ற பார்த்த போது ரத்த வெள்ளத்தில் லாவண்யா இறந்த நிலையில் கிடந்தார். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சீனியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி போலீஸ் கமிஷனர் காட்வின்ஜெகதீஸ்குமார், இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைைமயில் விசாரணை மேற்கொண்டனர். அதில் கொலையாளிகள் வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டாமல் இருந்ததால், அவர்கள் கதவை திறந்து சர்வசாதாரணமாக உள்ளே நுழைந்தது தெரியவந்தது. மேலும் வீட்டின் சாவி சீனியம்மாள் மற்றும் அவரது மகனிடம் மட்டும் தான் இருக்கும். அவர்களிடம் சாவி இருக்கும் போது யார் கதவை திறந்தது என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுதவிர வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா இயங்கவில்லை என்பதால் போலீசாரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. பின்னர் போலீசார் அந்த பகுதியில் இருக்கும் கேமராவை ஆய்வு செய்த போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்ததும், அவர்கள் முகத்தில் முகமுடி அணிந்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த சந்தேகத்திற்கு எல்லாம் விடை அன்று வீட்டில் இருந்த குமரகுரு மற்றும் அவரது குழந்தைகளிடம் விசாரித்த பின்னரே கிடைக்கும் என்று போலீசார் முடிவு செய்தனர்.

இதற்கிடையே லாவண்யாவின் இறுதி சடங்கு முடிந்த பின்னர் குமரகுருவிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது அவர் தெரிவித்த தகவலும், வீட்டில் நடந்த சம்பவங்களுக்கும் முன்னுக்குபின் முரணாக இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் குமரகுரு தான் அவரது மனைவியை கொலை செய்ய காரணமாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் கொலை குறித்து குமரகுரு போலீசாரிடம் கூறியதாவது:-

எனக்கு பெற்றோர் பார்த்து தான் லாவண்யாவை திருமணம் செய்து வைத்தனர். தந்தை இறந்த பிறகு கடை நிர்வாகத்தை நான் கவனித்து வந்தேன். தந்தை இறந்த பிறகு எனக்கு வந்த சொத்தில் பாதியை எனது மனைவியின் பெயருக்கு மாற்றி விட்டேன். இந்த நிலையில் வியாபாரம் குறைந்து வீட்டு செலவு அதிகரித்ததால் என்னிடம் இருந்த சொத்துகளை விற்று செலவு செய்தேன். பின்னர் எனது மனைவியின் பெயரில் உள்ள சொத்துகளை விற்பதற்காக அவரிடம் கேட்டேன்.

அவர் தரமறுத்ததால் எனக்கும், அவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை. மேலும் எனது மனைவிக்கு ஆதரவாக எனது தாயாரும் இருந்தார். எனது நிலை குறித்து கடையில் வேலை பார்க்கும் ஊழியர் அலெக்ஸ்சிடம் தெரிவித்தேன். உடனே அவர் உங்களுக்கு பிரச்சினை என்றால் அனைவரையும் கொலை செய்து விடுவோம். அதற்கு என்னிடம் ஆட்கள் இருக்கிறது என்றார். அதை தொடர்ந்து மனைவி, குழந்தைகள் மற்றும் எனது தாயாரை மொத்தமாக கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக அலெக்ஸ்சிடம் கூறி கூலிப்படையை தயார் செய்யுமாறு கூறினேன். அதற்கு கூலியாக அவர்களிடம் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன்.

சில நாட்களுக்கு முன்பு அனைவரும் ஊருக்கு சென்றோம். அங்கு வைத்து கொலை செய்ய முயன்ற போது மனைவி தலையில் மட்டும் வெட்டு விழுந்து தப்பித்து கொண்டார். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த சம்பவம் பதிவானது. ஆனால் அதனை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதன்பின்னர் தான் 2-வதாக வீட்டில் வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டினோம். அதன்படி கொலை நடக்கும் நாட்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆப் செய்து விட்டேன்.

பின்னர் சம்பவத்தன்று நள்ளிரவு 3 மணிக்கு கதவை திறந்து வைத்து விட்டு கூலி படையினருக்கு தகவல் கொடுத்தேன். அவர்கள் கதவை திறந்து நேராக மாடிக்கு சென்று மனைவியை கொலை செய்து விட்டனர். அப்போது எனது தாயார் எழுந்ததால் அவரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி விட்டதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து போலீசார் கொலையில் ஈடுபட்ட கூலிப்படையை சேர்ந்த அலெக்ஸ் உள்பட 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் லாவண்யா உடல் பிரேத பரிசோதனையின் போது அவரது தலையில் வெட்டு காயம் ஒன்று இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் குமரகுரு கூறியது போல் ஏற்கனவே கொலை முயற்சி நடந்தது உறுதி செய்யப்பட்டது.

Next Story