பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கு: நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை


பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கு: நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை
x
தினத்தந்தி 12 Jan 2020 4:45 AM IST (Updated: 12 Jan 2020 12:17 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

சேலம்,

நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த மாதம் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்‌ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக, மேலப்பாளையம் போலீசில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தயாசங்கர் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை பெரம்பலூரில் கைது செய்தனர். பின்னர் அவர் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நசீர் அகமது நேற்று முன்தினம் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் தினமும் காலையிலும், மாலையிலும் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் நெல்லை கண்ணன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டது.

ஜாமீனில் விடுதலை

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கோர்ட்டு உத்தரவு நகல் சேலம் மத்திய சிறையில் ஒப்படைக்கப்பட்டது. அவரை அழைத்து செல்வதற்காக நெல்லை கண்ணனின் மகன் சுரே‌‌ஷ் மற்றும் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், வாழப்பாடி ராமமூர்த்தி மகனுமான ராம சுகந்தன் மற்றும் த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.

காலை 7 மணியளவில் நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறையின் பின்பக்க வாசல் வழியாக காரில் சென்றார். 5 ரோடு ஏ.வி.ஆர். ரவுண்டானா வரை அவரை அழைத்து சென்று சிறைகாவலர்கள் விட்டனர்.

வீடு திரும்பினார்

இது குறித்து தகவல் கிடைத்ததும் அவரை வரவேற்க வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு புறப்பட்டார். நேற்று பிற்பகல் நெல்லை டவுனில் உள்ள அவருடைய வீட்டுக்கு சென்றடைந்தார்.

நெல்லை கண்ணன் யாரையும் சந்திக்க விரும்பாததால் பின்பக்க வாசல் வழியாக சென்றதாக தெரிகிறது. மேலும் சிறையின் வெளிப்பகுதியில் பா.ஜனதாவினர் இருக்கிறார்கள், இதனால் தேவை இல்லாத பிரச்சனை ஏற்படும் என்பதால் அவரை சிறையின் பின்பக்க வாசல் வழியாக காவலர்கள் அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிறையின் வெளியே பா.ஜனதா வினர் யாரும் இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.


Next Story