குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிடக்கோரி பிப்ரவரி 22-ந்தேதி மனிதசங்கிலி போராட்டம் - பல்வேறு கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு


குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிடக்கோரி பிப்ரவரி 22-ந்தேதி மனிதசங்கிலி போராட்டம் - பல்வேறு கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 13 Jan 2020 10:15 PM GMT (Updated: 13 Jan 2020 9:40 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிடக்கோரி அடுத்த மாதம் (பிப்ரவரி) 22-ந்தேதி தஞ்சை மாவட்டத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என பல்வேறு கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட அலுவலகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், சிறுபான்மை நல அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த செந்தில்குமார், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் முருகேசன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இதை அமல்படுத்தக்கூடாது என மத்திய, மாநில அரசை வலியுறுத்தி, சாதி, மதம் கடந்து லட்சம் பேர் கைகோர்க்கும் மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை அடுத்த மாதம் (பிப்ரவரி) 22-ந்தேதி நடத்துவது.

மாவட்டத்தின் தென்கோடியான மல்லிப்பட்டினத்தில் தொடங்கி அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள் வழியாக அணைக்கரை வரை 150 கி.மீ. தொலைவுக்கு மனித சங்கிலிப்போராட்டத்தை நடத்துவது. இதில் அனைத்துகட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story