இளம் ஆராய்ச்சியாளரை தேர்வு செய்வதற்கான அறிவியல் கண்காட்சி
தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்பத்துறை மூலம் மாணவர்களிடையே அறிவியல் சார்ந்த சிந்தனை, மனப்பாங்கை வளர்க்கவும் அறிவியல் சார்ந்த செயலாக்க திறனை அதிகரித்து 6 முதல் 10–ம் வகுப்பு மாணவர்களிடையே இருந்து இளம் ஆராய்ச்சியாளரை உருவாக்கவும் இன்ஸ்பயர் விருதினை வழங்கி வருகிறது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான இளம் ஆராய்ச்சியாளரை தேர்வு செய்வதற்கான அறிவியல் கண்காட்சி புதுக்கோட்டையில் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி தொடங்கி வைத்து பேசுகையில்,
மாணவர்கள் அனைவரும் வகுப்பறையில் கவனிக்க கற்று கொள்ள வேண்டும். பாடத்தை மட்டும் கவனித்தால் போதாது. நடந்து செல்கின்ற பாதை, செல்கின்ற பாதையில் கவனிக்கின்ற பொருள்கள், தாவரங்கள் எல்லாவற்றையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு கூர்ந்து கவனிக்க வேண்டும்.
ஏன், எதற்கு, எப்படி என்ற அறிவியல் சிந்தனையை வளர்க்க வேண்டும். மனம் போன போக்கில் போகக் கூடாது. மாணவர்கள் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்றார்.
இதில் இலுப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திரன், புதுதில்லி அறிவியல் தொழில்நுட்ப துறையின் மேலிடப் பார்வையாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தை சேர்ந்த 25 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். இந்த கண்காட்சியில் நடைசாதனம் மூலம் மின்சார உற்பத்தி, ஆற்றுபடுகையில் சிறு அணையின் மூலம் நீர்சேமித்தல் தீயணைப்புத்துறை, மருத்துவத்துறை, போக்குவரத்துத்துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருந்தன.