கோத்தகிரி அருகே, குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தைப்புலி - பொதுமக்கள் பீதி


கோத்தகிரி அருகே, குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தைப்புலி - பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 16 Jan 2020 10:15 PM GMT (Updated: 16 Jan 2020 5:29 PM GMT)

கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் சிறுத்தைப்புலி ஒன்று புகுந்தது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஓரசோலை பகுதியை சேர்ந்த நீலவர்ணம். கால்ப் லினக்ஸ் பகுதியிலிருந்து ஓரசோலை கிராமத்திற்கு செல்லும் சாலையோரத்தில் இவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் பயங்கரமாக சத்தம் போட்டு உள்ளது. இதனை கேட்டு நீலவர்ணம் வீட்டின் கதவை திறந்து வெளியே வந்து பார்த்துள்ளார்.

அப்போது சிறுத்தைப்புலி ஒன்று அவர் வளர்ப்பு நாயை கடித்து கவ்விச் செல்ல முயன்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அவர் சத்தம் போட்டு விரட்டவே, சிறுத்தைப்புலி நாயை விட்டு விட்டு வீட்டின் அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்குள் ஓடி மறைந்துள்ளது.

இருப்பினும் சிறுத்தைப்புலி கவ்விப்பிடித்ததில் அந்த நாய்க்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் சிறுத்தைப்புலி, நாயை கவ்வி இழுத்துச்செல்ல முயன்ற சம்பவம், நீலவர்ணம் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. குடியிருப்புக்குள் புகுந்து நாயை சிறுத்தைப்புலி பிடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஓரசோலை கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் சிறுத்தைப்புலிகள் அடிக்கடி குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக ஒரு சிறுத்தைப்புலி மட்டும் குடியிருப்பு பகுதியில் உலா வருகிறது. எனவே மனிதர்களை தாக்கும் முன்பு குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டிவிட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story