கரூர் பகுதியில் பொங்கல் விளையாட்டு விழா போட்டிகள் கோலாகலம்


கரூர் பகுதியில் பொங்கல் விளையாட்டு விழா போட்டிகள் கோலாகலம்
x
தினத்தந்தி 16 Jan 2020 11:00 PM GMT (Updated: 16 Jan 2020 8:04 PM GMT)

கரூர் பகுதியில் பொங்கல் விளையாட்டு விழா போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகிறது.

கரூர்,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைவரும் தங்களது வீட்டு முன்பு வாசல் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு வழிபாடு நடத்தினர். நேற்று மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி, வீட்டிலுள்ள காளை, பசுமாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் பூசி அலங்கரித்தனர். பின்னர் மாடுகளின் கழுத்தில் கரும்பு துண்டு, பணம், தங்ககாசு உள்ளிட்டவற்றை கட்டிவிட்டு அதற்கு பூஜை செய்து அவிழ்த்து விட்டனர். அப்போது சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் மாடுகளை தழுவி கழுத்தில் கட்டியிருந்தவற்ை-றை லாவகமாக எடுத்து மகிழ்ச்சி பொங்க விளையாடியதை காண முடிந்தது.

விளையாட்டு விழா

கரூர் நகரம் மற்றும் புறநகர் வீதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டிய விளையாட்டு விழாக்களும் கோலாகலமாக நடந்து வருகின்றன. அப்போது ஓட்டப்பந்தயம், சைக்கிள்-மோட்டார் சைக்கிள் ஓட்டும் பந்தயம், இசை நாற்காலி, எலுமிச்சை பழத்தை ஸ்பூனில் வைத்து ஓடுதல், சாக்கு போட்டி, கயிறு இழுத்தல், இளவட்டக்கல் தூக்குதல், பானை உடைத்தல், பலூன் உடைத்தல், கிரிக்கெட், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டதை காண முடிந்தது. பொங்கல்பண்டிகையையொட்டி வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள் உள்பட இளைஞர்கள், சிறுவர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் இந்த போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். இதைத்தவிர பெண்கள் பங்கேற்கும் வகையில் கோலப்போட்டி, ஸ்கிப்பிங் கயிறு துள்ளும் போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. இதைத்தவிர வேப்பங்குளம் உள்ளிட்ட இடங்களில் இட்லி சாப்பிடும் போட்டி, பழங்கள் சாப்பிடும் போட்டி ஆகியவையும் நடத்தப்பட்டன. இதில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போட்டி போட்டு சாப்பிட்டனர். அதிக எண்ணிக்கை யிலான இட்லி, பழங்களை சாப்பிட்டவர்கள் வெற்றி யாளராக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போலீசார் கண்காணிப்பு

கரூர், பசுபதிபாளையம், வெள்ளியணை, வாங்கல், அரவக்குறிச்சி, தென்னிலை, தோகைமலை, பாலவிடுதி என மாவட்டத்தில் 283 இடங்களில் பொங்கல் விளையாட்டு விழா நடத்த போலீசார் சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனவே அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாத வகையில் அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் சுழற்சி முறையில் ரோந்து சென்று கண் காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 500 போலீசார், பொங்கல் விளையாட்டுகளை கண் காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மது குடித்து விட்டு தகராறு செய்வது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டோரை தனியாக அழைத்து சென்று விசாரித்து எச்சரித்த பின்னரே போலீசார் அனுப்பி வைத்தனர். கரூரில் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காணும் பொங்கலை ஒட்டியும் போட்டிகள் நடைபெறுகின்றன. பின்னர் இரவில் நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்திய பின்பு இறுதியில் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட இருக் கின்றன.

வட்ட நெடுநேர சைக்கிள் போட்டி

லாலாபேட்டை அருகே கள்ளபள்ளி ஆதிதிராவிடர் காலனியில் பொங்கல் பண்டிகையையொட்டி வட்ட நெடுநேர சைக்கிள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கியது. தொடக்கத்தில் 9 நபர்கள் சைக்கிளில் ஏறி வட்ட நெடுநேர போட்டியில் கலந்து கொண்டு சுற்றிக் கொண்டு இருந்தனர். தற்போது நேற்று காலை 4 நபர்கள் மட்டும் சுற்றிக்கொண்டு உள்ளனர். இதில் இறுதியாக இறங்கும் நபருக்கு முதல் பரிசாக தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி மாணவர் மன்றத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story