வேப்பூர் அருகே நூதன முறையில் லாரிகளில் மணல் கடத்தல் - 2 டிரைவர்கள் கைது
வேப்பூர் அருகே நூதன முறையில் லாரிகளில் மணல் கடத்திய 2 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.
வேப்பூர்,
வேப்பூர் அருகே உள்ள மேமாத்தூர் மணிமுக்தாற்றில் இருந்து லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உஷாரான வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ், தலைமை காவலர்கள் பக்தவத்சலம், தனஞ்செழியன், சதன் ஆகியோர் மேமாத்தூரில் இருந்து வரும் சாலையில் பெரியநெசலூர் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மடக்கி, சோதனை செய்தனர். 2 லாரிகளிலும் தேங்காய் மட்டை மற்றும் மூட்டைகள் இருந்தன. மேலும் அவை, தார்பாயால் மூடப்பட்டு இருந்தன. ஆனால் லாரியின் பின்கதவு வழியாக தண்ணீர் கசிந்து சொட்டு, சொட்டாக வடிந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து தார்பாயை அகற்றி போலீசார் சோதனை செய்தனர். 2 லாரிகளிலும் தலா 6 யூனிட் மணல் ஏற்றப்பட்டு, அதன் மீது தேங்காய் மட்டை மற்றும் மூட்டைகளை அடுக்கி வைத்து, தார்பாயால் மூடி, சரக்கு ஏற்றி செல்வதுபோல் நூதன முறையில் அதனை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் லாரி டிரைவர்கள், சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஜெகநாதன்(வயது 45), ஓமலூர் அண்ணா நகரை சேர்ந்த அர்ச்சுனன் மகன் வெங்கடாசலம்(49) ஆகியோர் என்பதும், மேமாத்தூர் மணிமுக்தாற்றில் இருந்து சேலத்திற்கு மணல் கடத்தி செல்வதும், இதேபோல் பல மாதங்களாக 2 பேரும் நூதனமுறையில் லாரிகளில் மணல் கடத்தி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story