நத்தமாடிப்பட்டி, பெரியகலையம்புத்தூரில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள் - 41 பேர் காயம்


நத்தமாடிப்பட்டி, பெரியகலையம்புத்தூரில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள் - 41 பேர் காயம்
x
தினத்தந்தி 17 Jan 2020 10:15 PM GMT (Updated: 17 Jan 2020 7:19 PM GMT)

நத்தமாடிப்பட்டி, பெரியகலையம்புத்தூரில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர்.

கோபால்பட்டி, 

திண்டுக்கல் அருகே உள்ள நத்தமாடிப்பட்டியில், பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதனை திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

முன்னதாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. இதேபோல் மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். சுற்று வாரியாக 400 வீரர்கள் களம் இறங்கினர். ஒரு சுற்றுக்கு 100 பேர் வீதம் காளைகளை அடக்க வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க களத்தில் நின்ற மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். இதில் பல காளைகள் வீரர்களிடம் சிக்காமல் துள்ளிக்குதித்தும், ஆக்ரோஷமாக பாய்ந்தும் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று விளையாடி, வீரர்களை பந்தாடியது.

காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2 மணிக்கு போட்டி முடிவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை தட்டிச்சென்றனர். மேலும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கட்டில், பாத்திரங்கள், பரிசு பொருட்கள், மின் விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை திண்டுக்கல், சாணார்பட்டி, நத்தம், வடமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

நத்தமாடிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளைகளின் உரிமையாளர்கள் என 20 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் மலர்விழி தலைமையிலான மருத்துவ குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

காயமடைந்தவர்களில் கொசவபட்டியை சேர்ந்த லூர்து (வயது 49), காமலாபுரம் அருண் (24), திருப்பரங்குன்றம் தமிழரசன் (25), வேலாம்பட்டி மகேந்திரன் (23), குட்டத்துப்பட்டி அந்தோணி(37) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார், போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

இதேபோல் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி பெரியகலையம்புத்தூர் ஐகோர்ட்டு பத்திரகாளியம்மன் கோவில் விழாக்குழு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக் கட்டு நேற்று நடைபெற்றது. இதற்கு பழனி சப்-கலெக்டர் உமா தலைமை தாங்கினார். பழனி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், தாசில்தார் பழனிசாமி, நெய்க்காரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஜல்லிக்கட்டில் மதுரை, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 408 காளை கள் கலந்துகொண்டன.

இதையடுத்து வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சென்றன. சில காளைகள் பிடிபட்டன. போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பீரோ, கட்டில், செல்போன், மின்விசிறி, தங்க நாணயம், வெள்ளி நாணயம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. இதேபோன்று பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 21 பேர் காயம் அடைந்தனர்.

Next Story