திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம்; வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தரிசனம் அருணாசலேஸ்வரர்செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் சென்று வருகின்றனர்.
வருடத்தில் 2 முறை கார்த்திகை தீபம் முடிந்த அடுத்த நாளும், மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாளும் பக்தர்களை போலவே அருணாசலேஸ்வரரும் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம்.
பிருங்கி முனிவர் அருணாசலேஸ்வரரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்த போது வண்டு உருவில் மாறி அருணாசலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கியிருக்கிறார். இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக ஐதீகம்.
இது மனித வாழ்வில் கணவன்-மனைவிக்கு இடையே ஊடல் ஏற்பட்டு கூடல் ஏற்படுவது வாழ்வின் ஒரு நிலை என்பதை உணர்த்துகிறது.
இந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழா நடக்கும். இந்த திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது சாமிக்கும், அம்மனுக்கும் ஊடல் ஏற்பட்டு கோவிலுக்கு அம்மன் சென்று விட்டார். அருணாசலேஸ்வரர் குமரக்கோவிலுக்கு சென்றார்.
அங்கிருந்து நேற்று அதிகாலை அருணாசலேஸ்வரர் கிரிவலம் புறப்பட்டார். வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர்.
பகல் சுமார் 1 மணி அளவில் சாமி மீண்டும் கோவிலை அடைந்தார். அப்போது கோவில் வளாகத்தில் மறுவூடல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர் விடுமுறையாலும், காணும் பொங்கல் என்பதாலும், மறுவூடல் விழா என்பதாலும் திருவண்ணாமலை கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story