திருவாரூரில் இருந்து மதுரைக்கு ரெயில் இயக்க வேண்டும் - ரெயில் உபயோகிப்போர் சங்கம் வலியுறுத்தல்


திருவாரூரில் இருந்து மதுரைக்கு ரெயில் இயக்க வேண்டும் - ரெயில் உபயோகிப்போர் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Jan 2020 3:45 AM IST (Updated: 18 Jan 2020 1:48 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் இருந்து மதுரைக்கு ரெயில் இயக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்போர் சங்கத்தினர் திருவாரூர் வந்த தென்னக ரெயில்வே மேலாளரிடம் வலியுறுத்தினர்.

திருவாரூர்,

தென்னக ரெயில்வே மேலாளர் நீனு இட்டாரியா (இயக்குதல்) நாகை, காரைக்கால் வேளாங்கண்ணி ஆகிய ரெயில் அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் திருச்சிக்கு புறப்பட்டு செல்லும் வழியில் அவர் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரிடம் ரெயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பாஸ்கரன் தலைமையில், நிர்வாகிகள் அக்பர்பாஷா, பாலசுப்பிரமணியன், ஹேமந்த், இலியாஸ் ஆகியோர் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவாரூரில் முதன்மை பணிமனை அமைக்க வேண்டும். திருவாரூரில் இருந்து அதிகாலையில் தஞ்சை, திருச்சி வழியாக மதுரைக்கும், இரவு 7 மணிக்கு மேல் திருச்சியில் இருந்து திருவாரூருக்கும் ரெயில் இயக்க வேண்டும்.

விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வரை வரும் ரெயில்களை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும். திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருக்கை வசதிகள் நிழலகத்துடன் அமைக்க வேண்டும். நடைமேடை 2, 3 ஆகியவற்றை உயரமாக்க வேண்டும். மேலும் திருவாரூர்-காரைக்குடி அகல பாதையில் உடனடியாக ரெயில்சேவைகள் தொடங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அப்போது ரெயில்வே கோட்ட இயக்க மேலாளர் பூபதிராஜா, நிலைய மேலாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல் திருவாரூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் அண்ணாதுரை, பொதுச்செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் அழகிரிசாமி, காளிமுத்து ஆகியோர் தென்னக ரெயில்வே மேலாளர் நீனு இட்டாரியாவை (இயக்குதல்) சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர்-காரைக்குடி வழி பாதையில் கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும். திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தஞ்சை முதல் நாகை வரை இரட்டை வழிபாதை சேவையை நீட்டிக்க வேண்டும். நாகப்பட்டினம் சந்திப்பில் இருந்து தஞ்சாவூர் வரை ரெயில் மின்மயமாக்கலை விரைவாக முடித்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story