அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த ஊழியர் தற்கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்


அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த ஊழியர் தற்கொலை -  உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Jan 2020 4:00 AM IST (Updated: 19 Jan 2020 12:03 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் நிகழ்ச்சியில் தாக்கியதால் அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையம் அம்பேத்கர் வீதி யை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 32). இவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அம்பேத்கர் வீதியில் பொங்கல் பண்டிகையையொட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையொட்டி மேளம் அடித்துக் கொண்டு இருந்தனர். இதை பார்த்ததும் ஆனந்தகுமார் அங்கு சென்று ஆடியதாக தெரிகிறது. அப்போது அங்கு நின்றவர்களுக்கும், ஆனந்தகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றவே ஆனந்தகுமாரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பி அவர் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் வீட்டிற்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, ஆனந்தகுமார் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்வதற்கு பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் மற்றும் போலீசார் குரும்பபாளையத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் தற்கொலை செய்து கொண்ட ஆனந்தகுமாரின் மனைவி பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மதன், கார்த்தி, அருண், மனோகரன் ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஆனந்தகுமாரின் உடல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் ஆனந்த குமார் சாவுக்கு காரணமானவர் களை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் திடீரென்று அரசு ஆஸ்பத்திரி முன் உடுமலை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதை ஏற்று ஆனந்தகுமாரின் உறவினர்கள் மறியலை கைவிட்டனர். இதையடுத்து, ஆனந்த குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டது.

Next Story