தூத்துக்குடியில் லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியானது எப்படி? - உருக்கமான தகவல்


தூத்துக்குடியில் லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியானது எப்படி? - உருக்கமான தகவல்
x
தினத்தந்தி 18 Jan 2020 11:15 PM GMT (Updated: 18 Jan 2020 8:32 PM GMT)

தூத்தக்குடியில் லாரியும், காரும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 4 பேர் பலியானது எப்படி? என்ற உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி, 

சென்னை சாஸ்திரி நகரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 73). தொழில் அதிபரான இவர் தனது மனைவி பிரபா, மகள் கவிதா, கவிதாவின் மகள் ரம்யா (20), மகன் வீரேந்திரன் (15), ரம்யாவின் தோழியான சென்னையை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மகள் பார்கவி (23) ஆகியோருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு 2 கார்களில் புறப்பட்டார். ஒரு காரில் ரம்யா, வீரேந்திரன், பார்கவி இருந்தனர். அந்த காரை திருச்சியை சேர்ந்த ஜோபின் (29) என்பவர் ஓட்டினார். மற்றொரு காரில் சுபாஷ் சந்திரபோஸ், பிரபா, கவிதா மற்றும் கார் டிரைவர் ஆகியோர் இருந்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் ஒரு பகுதியில் பாலப்பணிகள் முடிவடைந்து விட்டன. மற்றொரு பகுதியில் சீரமைப்பு பணிகள் முடியவில்லை. இதனால் நாற்கர சாலையில் இருபுறமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஒருபுறமாக சென்று வருகின்றன.

இந்த சாலையில் ஜோபின் ஓட்டி வந்த கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி ஒரு லாரி சென்றது. திடீரென கண் இமைக்கும் நேரத்தில் லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் கார் லாரிக்கு அடியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், சிப்காட் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை வெளியே எடுத்தனர். இந்த விபத்தில் காரில் இருந்த ரம்யா, வீரேந்திரன், பார்கவி, டிரைவர் ஜோபின் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னால் வந்த காரில் இருந்த உறவினர்கள், பலியானவர்களின் உடல் களை பார்த்து கதறி அழுதனர்.

சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து நடந்தது எப்படி? என்று விசாரணை நடத்தினர். இதில், வெளியூரில் இருந்து வந்ததால், அந்த பாலத்தின் ஒருபுறமாகத்தான் இருபுறமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சென்று வருவது அவர்களுக்கு தெரியவில்லை. எனவே, ஒருவழிப்பாதை என நினைத்து காரை வேகமாக ஓட்டி சென்றதும், அப்போது எதிரே வந்த லாரியும், காரும் மோதி 4 பேரும் உயிரிழந்த உருக்கமான தகவல் தெரியவந்தது.

இதையடுத்து லாரி டிரைவரான மதுரையை சேர்ந்த சந்திரசேகர் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விபத்தில் உயிர் இழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மதியம் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த ரெயில்வே மேம்பாலத்தில் தொடர் விபத்துக்களை தடுக்க சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story