கள்ளக்குறிச்சியில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி கலெக்டர் பங்கேற்பு


கள்ளக்குறிச்சியில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 Jan 2020 4:00 AM IST (Updated: 19 Jan 2020 2:47 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் கலெக்டர் கிரண்குராலா கலந்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ‘பிட் இந்தியா’ சைக்கிள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ரெத்தினமாலா, மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கிரண்குராலா கலந்து கொண்டு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் அரசு அதிகாரிகள், ஏ.கே.டி. மற்றும் அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கிரண்குராலாவும் கலந்து கொண்டார்.

சுற்றுச்சூழலை காப்போம்

அப்போது சைக்கிள் ஓட்டுவோம், சுற்றுச்சூழலை காப்போம். நோயற்ற வாழ்வை பெறுவோம், சைக்கிள் தினத்தை கொண்டாடுவோம், உடல் ஆரோக்கியத்தை காப்போம், உடல் தகுதி பெறுவோம் என்று கோஷங்களை எழுப்பியபடி சைக்கிளில் பேரணியாக சென்றனர். இந்த பேரணி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் முடிவடைந்தது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், சிவக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொளஞ்சிவேலு, ஜோசப், ஆனந்தராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஷபி, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடாசலம், ஏ.கே.டி.பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், நீலமங்கலம் ஊராட்சி செயலாளர் முத்தையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story