குன்றத்தூர்- சோமங்கலம் வழித்தடத்தில் அரசு பஸ்களை மீண்டும் இயக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
குன்றத்தூர்- சோமங்கலம் வழித்தடத்தில் அரசு பஸ்களை மீண்டும் இயக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த பூந்தண்டலம், பழந்தண்டலம், சோமங்கலம், நல்லூர் புது நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இந்த பகுதிகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக குன்றத்தூர்- சோமங்கலம் வழித்தடத்தில் 5 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தது. கடந்த சில மாதங்களாக இங்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். எனவே இந்த பகுதியில் மீண்டும் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலை, சோமங்கலம் கூட்டு சாலையில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு குன்றத்தூர் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போக்குவரத்து துறை சார்பில் அதிகாரிகள் வந்து பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று தெரிவித்ததையடுத்து அய்யப்பன்தாங்கல் பணிமனையில் இருந்து பணிமனை மேலாளர் வந்து மீண்டும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
சாலை மறியலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சை அந்த பகுதிக்கு இயக்க வைத்தார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்:-
கோயம்பேட்டில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக கடந்த சில ஆண்டுகளாக போரூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர்-குன்றத்தூர் சாலை வழியாக ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக சிதிலம் அடைந்து வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் சாலைகள் சிதிலமடைந்து காணப்படுவதால் ஸ்ரீபெரும்புதூர்-குன்றத்தூர் வழியாக செல்லும் ஒரு சில அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக சோமங்கலம், பழந்தண்டலம், நல்லூர், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்க கூடிய மக்கள் பஸ் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.
இங்கு பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த பஸ்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை போக்குவரத்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை, பஸ்சை நிறுத்தியதற்கான உரிய காரணமும் கூறவில்லை. தற்போது போராட்டம் நடத்தியபிறகு அரசு பஸ்களை இயக்குவதாக உறுதி அளித்துள்ளனர். இனியும் அரசு பஸ்கள் இயக்கவில்லை என்றால் பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story