ஓசூர் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் பறிப்பு: சேலத்தில் கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது


ஓசூர் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் பறிப்பு: சேலத்தில் கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jan 2020 10:15 PM GMT (Updated: 21 Jan 2020 8:46 PM GMT)

ஓசூர் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் பறித்த கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 4பேரை போலீசார் சேலத்தில் கைது செய்தனர்.

சேலம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 45). ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரது செல்போனில் தொடர்பு கொண்டு ஓசூரில் நிலம் வேண்டும் என்று கூறியது.

பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஓசூர் சென்று நிலத்தை பார்த்துவிட்டு விலைக்கு வாங்கிக்கொள்வதாக அவரிடம் கூறிவிட்டு வந்தனர். சில நாட்களுக்கு பிறகு அவரை தொடர்பு கொண்டு நிலத்திற்கான முன்பணத்தை வாங்கிச்செல்லும்படி அவர்கள் கூறினர். இதை நம்பி சேலம் வந்த சத்தியமூர்த்தியை அந்த கும்பல் கடத்திச்சென்று மிரட்டி ரூ.11 லட்சத்தை பறித்துக் கொண்டது.

கடத்தல் கும்பல் தலைவன்

இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் கடத்தல் கும்பலை சேர்ந்த ஜீவா (36), கோபால் (36), சதீஸ்குமார் (20), கவுரிசங்கர் (33) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் இதில் சம்பந்தப்பட்ட மேலும் 4 பேரை தேடி வந்தனர்.இந்த நிலையில் கடத்தலில் சம்பந்தப்பட்ட சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த பாபு (31), முருகப்பாண்டியன் (25), மரவனேரியை சேர்ந்த கார்த்திக் (25), நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (25) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பாபு கடத்தல் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பாபு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story