மாவட்ட செய்திகள்

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு மர்ம நபரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் போலீசில் சரண் பரபரப்பு தகவல்கள் + "||" + Brought the mysterious person Charan in Auto Driver Police

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு மர்ம நபரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் போலீசில் சரண் பரபரப்பு தகவல்கள்

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு  மர்ம நபரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் போலீசில் சரண்  பரபரப்பு தகவல்கள்
மங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்தவரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் போலீசில் சரண் அடைந்தார். மேலும் அவர் பல்வேறு பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.
மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே அமைந்துள்ள பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு சக்திவாய்ந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. 

விமான நிலையங்களில்...

இதனால் மங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் பெங்களூரு, மைசூரு, உப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள விமான நிலையங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மங்களூரு விமான நிலையத்தில் ஏற்கனவே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய போலீசார், சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு படையினர்

இந்த நிலையில் நேற்று மங்களூருவுக்கு தேசிய பாதுகாப்பு படையினர்(என்.எஸ்.ஜி.) வரவழைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுடன் சேர்ந்து கர்நாடக மாநில சிறப்பு ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

நேற்று மங்களூரு விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. பயணிகள் அனைவரையும் தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னரே விமான நிலையத்திற்குள் போலீசார் அனுமதித்தனர். விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக சோதித்து வருகிறார்கள். இதன்காரணமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் விமான நிலைய பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டு கார்கள்

இதற்கிடையே நேற்று தமிழ்நாட்டில் இருந்து 2 கார்கள் விமான நிலையத்துக்கு வந்தன. அந்த 2 கார்களையும் பாதுகாப்பு படையினர் பிடித்து வைத்துள்ளனர். மேலும் விமானத்திற்கு வரும் பயணிகள், அவர்களுடன் வரும் நபர்கள் என அனைவரின் பெயர், விவரங்களை பாதுகாப்பு படையினர் கேட்டு பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மங்களூரு விமான நிலையத்திற்கு ஆட்டோவில் வந்து சக்திவாய்ந்த வெடிகுண்டை வைத்துவிட்டு சென்ற மர்ம நபரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். அவர் உடுப்பியில் பதுங்கி இருப்பதாகவும், அவர் பஸ் மூலம் உடுப்பிக்கு சென்று அங்கிருந்து ரெயில் மூலம் வடகர்நாடகத்திற்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

ஆட்டோ டிரைவர் சரண்

இந்த நிலையில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தவரை ஆட்டோவில் அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் நேற்று தாமாக முன்வந்து போலீசில் சரண் அடைந்தார். அதாவது வெடிகுண்டு வைத்தவரை ஆட்டோவில் விமான நிலையத்திற்கு அழைத்து வந்த டிரைவர், தனது ஆட்டோ குறித்து ஊடகங்களில் வெளிவந்த செய்திகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். அவர் தெரிவித்ததாக போலீசார் கூறிய தாவது:-

ஆட்டோவில் வந்த நபர் துளு மொழியில் பேசினார். அவர் தன்னுடன் 3 பைகளை வைத்திருந்தார். அவரை நான் கெஞ்சாரு பகுதியில் உள்ள ஒரு முடிதிருத்தம் கடை முன்பு வைத்துதான் பார்த்தேன்.

தனியார் பஸ் மூலம்...

தனியார் பஸ் மூலம் அவர் கெஞ்சாரு பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அவர் தனது 3 பைகளையும் கெஞ்சாரு பகுதியில் உள்ள ஒரு முடிதிருத்தம் கடையில் வைத்துள்ளார். அதைப்பார்த்த முடிதிருத்தம் கடை ஊழியர்கள், 3 பைகளையும் கடைக்கு வெளியே வைக்கும்படி கூறியுள்ளனர். அதன்பேரில் அவர் 3 பைகளையும் கடைக்கு வெளியில் வைத்துவிட்டு முடிதிருத்தம் செய்து கொண்டுள்ளார்.

அதன்பிறகு அவர் ஒரு பையை மட்டும் எடுத்துக் கொண்டு ஆட்டோவில் என்னுடன் வந்தார். அவர் என்னிடம் எந்தவிதமான பிரச்சினையிலும் ஈடுபடவில்லை. நல்லபடியாகதான் பேசி வந்தார்.

ரூ.400 வாடகை

வெடிகுண்டு இருந்த பையை அவர் விமான நிலையத்திற்குள் கொண்டு சென்று வைத்துவிட்டு மீண்டும் என்னுடன் ஆட்டோவில் வந்தார். அப்போது அவர் என்னிடம், பம்ப்வெல் பகுதியில் என்னை இறக்கிவிட்டு விடுங்கள் என்று கூறினார். அதற்கு நான் அவரிடம் ரூ.400 வாடகை கேட்டேன். நான் கேட்ட ரூ.400 வாடகையையும் அவர் கொடுத்தார்.

பின்னர் அவர் கெஞ்சாரு பகுதியில் உள்ள முடிதிருத்தம் செய்யும் கடைக்கு சென்று மீதி இருந்த 2 பைகளை யும் எடுத்துக் கொண்டார். அதன்பின்னர் அவரை, நான் பம்ப்வெல் பகுதிக்கு அழைத்துச் சென்றுவிட்டு விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

19 கிலோ மீட்டர் தூரம்

வெடிகுண்டு வைத்து நாசவேலையில் ஈடுபட முயன்ற மர்ம நபர் கெஞ்சாரு பகுதியில் இருந்து பஜ்பே விமான நிலையத்திற்கு சுமார் 19 கிலோ மீட்டர் தூரம் ஆட்டோ விலேயே பயணம் செய்து வந்துள்ளார். கெஞ்சாரு பகுதியில் இருந்து பஜ்பே விமான நிலையத்திற்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அப்படி இருக்க ஏன் அவர் ஆட்டோவில் வந்து, மீண்டும் ஆட்டோவிலேயே பம்ப்வெல் பகுதிக்கு சென்றார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் அவர் வைத்திருந்த மற்ற 2 பைகளில் என்ன இருந்தது?, அவற்றிலும் வெடிகுண்டுகள் இருந்தனவா? என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.