ஈரோடு மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி முகாம் - அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தனர்


ஈரோடு மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி முகாம் - அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 22 Jan 2020 11:00 PM GMT (Updated: 22 Jan 2020 6:46 PM GMT)

ஈரோடு மாவட்ட கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி முகாமை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இந்த ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தல் மூலமும், துணைத்தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலமும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். புதிதாக கிராம ஊராட்சிகளின் தலைவர்களாவும், துணைத்தலைவர்களாகவும் பதவி ஏற்று இருப்பவர்களுக்கு உள்ளாட்சி துறை குறித்து அறிமுக பயிற்சி ஈரோடு நந்தா என்ஜினீயரிங் கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது.

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் ஒரு நாள் அறிமுக பயிற்சியாக இது நடந்தது. முகாமுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது கூறியதாவது:-

புதிதாக பதவி ஏற்று இருக்கும் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள் தங்கள் மக்கள் பணியை சரியாக செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர்கள் என்ற முறையில் நாங்கள் உறுதுணையாக இருப்போம். கிராம ஊராட்சி என்பது ஒரு சிறிய பரப்பில் அமைந்திருப்பது. ஆனால் அங்கு மக்கள் பணியாற்றுவது என்பது மிகப்பெரிய சவாலான விஷயமாகும். தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நானும் ஒரு ஊராட்சி மன்ற தலைவராக இருந்து படிப்படியாக உயர்ந்து இருக்கிறேன். எனவே ஊராட்சி மன்ற பணிகள் ஆற்றுவதில் உள்ள சிரமங்கள் எனக்கும் தெரியும்.

உள்ளாட்சியை பொறுத்தவரை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். விரைவில் மத்திய அரசின் திட்ட நிதிகள் வர இருக்கிறது. குடிநீர் திட்டங்கள், தெருவிளக்குகள் என்று அடிப்படை தேவைகளுக்காக நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும். குடியிருப்புகள் கட்டுவதற்கு முன்பு அங்கு ஊராட்சி மூலம் அடிப்படை வசதிகள் செய்ய தேவையான நடைமுறைகள் அனைத்தையும் முடித்த பிறகே அனுமதி வழங்க வேண்டும்.

வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுப்பதில் அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நடக்க வேண்டும். குடிநீர் திட்டங்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் ஆற்று நீர் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது பட்டா வழங்குவதில் உள்ள தடைகள் நீக்கப்பட்டு இருக்கிறது. எனவே தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கவும், பசுமைவீடுகள் திட்டத்தில் வீடுகள் கட்டிக்கொள்ளவும் உதவ வேண்டும். மத்திய அரசின் நிதி வராமல் இருந்தாலும் தமிழக அரசே நிதியை வழங்கி பசுமை வீடுகள் திட்டத்தை நிறைவேற்றுவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது.

இதுபோல் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. தகுதியானவர்களை அங்கு குடியமர்த்த வேண்டும். இங்கு பயிற்சியில் இருக்கும் ஈரோடு மாவட்ட கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள் நந்தா கல்வி நிறுவனத்தில் இயங்கும் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் கிராம மக்களுக்கு சிகிச்சை தேவை என்றால் இலவசமாக வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

விழாவில் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியதாவது:-

கிராம ஊராட்சி தலைவர்கள் பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர், மின்சாரம், இருப்பிடம், உணவு ஆகியவை சரியாக கிடைக்க தேவையான பணிகளை செய்ய வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் பணியை செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். பொதுச்ேசவை, மக்கள் பணி செய்ய உங்கள் பகுதி மக்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பை தந்து இருக்கிறார்கள். எனவே நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தெருவிளக்குகள் பராமரிப்புக்காக ஊராட்சி மன்றம் மூலம் தற்காலிக பணியாளரை நியமிக்க வேண்டும். அதன் மூலம் சரியான சேவையை வழங்க முடியும். முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை போன்ற அரசின் திட்டங்களை பொதுமக்கள் சரியாக பெற தேவையான உதவிகளை செய்ய வேண்டும். தமிழகத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மழை பொழிந்து அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இதுவே நல்ல ஆட்சிக்கு சாட்சியாக இருக்கிறது. எனவே ஊராட்சி தலைவர்களும், தங்கள் பகுதியில் இன்னும் இருக்கும் குறைகளை முழுமையாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

விழாவில் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அதிகாரி சிவசங்கர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மு.பாலகணேஷ் வரவேற்றார். முடிவில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் மு.விஜயசங்கர் நன்றி கூறினார். பயிற்சி மாலை வரை நடந்தது.

Next Story