பொங்கல் விடுமுறைக்கு பிறகு, பிச்சாவரம் சுற்றுலா மையம் வெறிச்சோடியது
பொங்கல் விடுமுறைக்கு பிறகு பயணிகள் வராததால் பிச்சாவரம் சுற்றுலா மையம் வெறிச்சோடியது.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அருகே பிச்சா வரத்தில் எழில் கொஞ்சும் அழகிய சதுப்பு நிலக்காடுகள் அடங்கிய சுற்றுலா மையம் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செய்து சதுப்பு நிலக்காடுகளை ரசித்து செல்வார்கள். கடந்த மாதம்(டிசம்பர்) 25-ந் தேதி கிறிஸ்துமஸ், கடந்த 1-ந் தேதி புத்தாண்டு, கடந்த வாரம் பொங்கல் விழா என தொடர்ந்து பண்டிகையாக இருந்ததால் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது. இதனால் பிச்சாவரம் சுற்றுலா மையம் களைகட்டி இருந்தது. பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் மட்டும் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் 8 ஆயிரத்து 425 பேர் படகு சவாரி செய்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு ரூ.14 லட்சத்து 10 ஆயிரம் வருவாய் கிடைத்திருந்தது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிவடைந்து, பள்ளி கல்லூரிகள் கடந்த 20-ந் தேதி திறக்கப்பட்டன. இதனால் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணிகள் வரத்து குறையத்தொடங்கியது. நேற்று காலை முதல் மாலை வரை சுற்றுலா பயணிகள் வராததால் பிச்சாவரம் சுற்றுலா மையம் வெறிச்சோடி காணப்பட்டது. படகு பதிவு செய்யும் இடமும், ஆட்கள் நடமாட்டமின்றி இருந்தது. மேலும் படகுகளும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. படகு ஓட்டுபவர்கள் மரத்தடியில் ஓய்வெடுத்ததை காணமுடிந்தது.
Related Tags :
Next Story