மாற்றுத்திறனாளிகளுக்காக வழிபாட்டு தலங்களில் சாய்தள பாதை - கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் சென்று வர வசதியாக வழிபாட்டு தலங்களில் சாய்தள பாதை அமைத்து தரப்படும் என கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கையில் உள்ள தாய் இல்லத்தின் சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா மற்றும் தொழில் பயிற்சி தொடக்க விழா தாய் இல்லத்தின் நிறுவனரும், தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவருமான புஷ்பராஜ் என்ற மலர் மன்னன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் ஜெயகாந்தன், மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சியினை தொடங்கி வைத்து பேசியதாவது:-
மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றும் வகையில் பதிவேடு முறையை அமல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலகங்கள் மட்டுமின்றி வழிபாட்டு தலங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் சென்று வர சாய்தள பாதை அமைத்து தரப்படும்.
வளர்ந்து வரும் இன்றைய அறிவியல் உலகில் பல்வேறு துறைகளில் மாற்றுத்திறன் படைத்தோர் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். மேலும் அவர்கள் தொழில் துறையிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை நல அலு வலர் சரவணக்குமார், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமுத்து, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி அனந்தராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதை தொடர்ந்து சிறப்பு பட்டிமன்றம் கூட்டமைப்பு தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் நடுவராக அன்புத்துரை கலந்துகொண்டார். பேராசிரியர் ஹேமமாலினி, சரளாகணேஷ், கவிஞர் ராஜா, வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஏற்பாடுகளை தாய் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story