கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிறைவேறினால் வேலூர் மாவட்டத்தில் வறட்சி இருக்காது - அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு


கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிறைவேறினால் வேலூர் மாவட்டத்தில் வறட்சி இருக்காது - அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 25 Jan 2020 10:45 PM GMT (Updated: 25 Jan 2020 4:09 PM GMT)

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிறைவேறினால் வேலூர் மாவட்டத்தில் வறட்சி இருக்காது என்று அணைக்கட்டில் நடந்த முப்படைகள் சந்திப்பு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

அணைக்கட்டு, 

வேலூர் மேற்கு மாவட்டம் அணைக்கட்டு சட்டபேரவைத் தொகுதிகுட்பட்ட நகரம், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பா.ம.க.வின் முப்படைகள் சந்திப்பு கூட்டம் அணைக்கட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணை பொது செயலாளர் இளவழகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

கோதாவரி-காவரி ஆற்றை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி இத்திட்டத்திற்கு ரூ.65 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளார். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் வேலூர் மாவட்டத்தில் வறட்சி என்பதே இருக்காது.

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்பது தேவையற்றது. இதை பா.ம.க. கடுமையாக எதிர்த்து வருகிறது. இதனால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பள்ளி படிப்பைக்கூட தொடர முடியாமல் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாகும் சூழல் ஏற்படும். உடனடியாக தமிழக அரசு இதை திரும்ப பெற வேண்டும். 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்த்து பா.ம.க 28-ந் தேதி சென்னையில் போராட்டத்தை நடத்தவுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை 4 உரிமம் வழங்கியுள்ளதை பா.ம.க. எதிர்த்து வருகிறது. மேலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற்சி மேற்கொள்கிறது. இதை தடுக்க வேண்டும் என தமிழக முதல் - அமைச்சரை சந்தித்து பல முறை மனு கொடுத்தோம். முதல் - அமைச்சர் ஒரு விவசாயி, இதனால் கண்டிப்பாக இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மாட்டார் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், முன்னாள் மாவட்ட செயலாளர் பி.கே. வெங்கடேசன், மாநில மகளிர் அணி செயலாளர் வரலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட துணை செயலாளர்கள் நா.சசிகுமார், இளங்கோவன், மாவட்ட அமைப்பு செயலாளர் அக்னிவேல்முருகன், மாவட்ட கொள்கை பரப்பு தலைவர் ராமுலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தெற்கு மாவட்ட செயலாளர் ரவி வரவேற்றார். முடிவில் அணைக்கட்டு பா.ம.க ஓன்றிய செயலாளர் அன்பரசன் நன்றி கூறினார்.

இதே போல ஊசூரில் நடந்த முப்படைகள் சந்திப்பு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு பேசினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயமுருகன், ஜலகண்டேஸ்வரன், ஒன்றிய துணைத்தலைவர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story