ஊராட்சி தலைவர், துணை தலைவர்களுக்கான பயிற்சி முகாம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


ஊராட்சி தலைவர், துணை தலைவர்களுக்கான பயிற்சி முகாம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Jan 2020 10:45 PM GMT (Updated: 25 Jan 2020 5:51 PM GMT)

தூத்துக்குடியில் ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்களுக்கான பயிற்சி முகாமை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது;- தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் மற்றும் கோவில்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 202 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 200 துணைத்தலைவர்களுக்கு அறிமுக பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவு பெற்று வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் மக்கள் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு பாகுபாடின்றி தன்னிச்சையாகவும், வேகமாகவும் மக்கள் பணியாற்ற வேண்டும். ஊராட்சிகளில் அனைத்து பணிகளையும் மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 24 கிளைகள் செயல்படுகிறது. இதன் 25-வது கிளை கோவில்பட்டியில் தொடங்கப்பட உள்ளது. தென்மாவட்டங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் குவைத் நாட்டின் பெட்ரோலியம் நிறுவனத்துடன் ரூ.43 ஆயிரம் கோடி மதிப்பில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் தொடங்கப்பட உள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்து உள்ளார். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் பயிற்சியை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, ஊராட்சிகள் துணை இயக்குனர் உமாசங்கர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணேஷ் பாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story