5-ந் தேதி தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் முன்பக்க வழியாக செல்ல ஏற்பாடு


5-ந் தேதி தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் முன்பக்க வழியாக செல்ல ஏற்பாடு
x
தினத்தந்தி 26 Jan 2020 4:30 AM IST (Updated: 26 Jan 2020 2:25 AM IST)
t-max-icont-min-icon

5-ந் தேதி நடைபெறும் தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் முன்பக்க வழியாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் முக்கிய பிரமுகர்கள் சிவகங்கை பூங்கா வழியாக அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டு களுக்குப்பிறகு வருகிற 5-ந் தேதி(புதன்கிழமை) காலை நடக்கிறது. இதையொட்டி தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க திட்டமிட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கும்பாபிஷேகத்திற்காக பெரியகோவில் விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து சன்னதி கோபுரங்களிலும் இருந்த கலசங்கள் கழற்றி சுத்தப்படுத்தப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டு வருகிறது. மேலும் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், நந்திபெருமான் சன்னதிகளின் முன்புறம் இருந்த கொடிமரமும் அப்புறப்படுத்தப்பட்டு புதிய கொடிமரம் நடப்படுகிறது. இதற்காக 40 அடி உயர தேக்குமரம் கொண்டு வரப்பட்டு புதிய கொடிமரம் தயார் செய்யப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்துக்காக கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை பூஜைக்காக 178 அடி நீளத்திலும், 108 அடி அகலத்திலும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலுக்காக கான்கிரீட் போடப்பட்டு அதில் இரும்புத்தூண்கள் அமைக்கப்பட்டு தகரத்தால் கொட்டகை போடப்பட்டுள்ளது.

யாகசாலை பூஜைக்காக மொத்தம் 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதிலும் பணிகள் அனைத்தும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. யாகசாலை பூஜைகள் வருகிற 1-ந் தேதி மாலை தொடங்குகிறது. மொத்தம் 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.

பெரியகோவில் வளாகத்தில் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் சிரமமின்றி காண வசதியாகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 15 இடங்களில் இரும்புகம்பிகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்படுகிறது. இதற்காக கோவில் வளாகத்தில் இரும்புக்கம்பிகள் கொண்டு வந்து குவித்து வைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் தலா 600 முதல் 800 பேர் வரை அமரும் வகையில் தடுப்புகள் அமைக்கப்படுகிறது.

மேலும் ராஜராஜன் கோபுரத்துக்கு வெளிப்புற பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் பகுதியில் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் தடுப்புக்கட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதே போல் அகழி கரைகளிலும் இரும்புக்கம்பிகளால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் முடிவடைந்தவுடன் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு தடுப்புக்கம்பி பகுதிக்குள் இருப்பவர்களையும் வரிசையாக செல்லும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் அனைவரும் கோவிலின் முன்பக்க வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். இவர்கள் மராட்டா நுழைவுவாயில் வழியாக கேரளாந்தகன் கோபுரத்தின் அருகே இடதுபுறமாக உள்ளே சென்று திருச்சுற்று மண்டபத்தின் தென்பகுதியில் உள்ள வாயில் வழியாக (வராகி அம்மன் அருகே) உள்ளே சென்று தடுப்புக்குள் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தரிசனம் முடித்தவர்கள் மேற்கு பகுதியில் உள்ள வாசல் வழியாக வெளியே சென்று சேப்பனாவாரி வழியாக வெளியே செல்ல வேண்டும்.

மிகவும் முக்கிய பிரமுகர்கள் சிவகங்கை பூங்கா வழியாக வாகனத்தில் சென்று வாகனத்தை பூங்கா வளாகத்தில் நிறுத்தி விட்டு வடக்கு பகுதி வாசல் வழியாக உள்ளே செல்லவும், மீண்டும் அதே வழியில் திரும்பி செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கிய பிரமுகர்கள் திலகர் திடலில் வாகனங்களை நிறுத்தி விட்டு சிறிய கோட்டை சுவர் வழியாக சார்பதிவாளர் அலுவலகம் அருகே வந்து பெத்தண்ணன் கலையரங்கம் செல்லும் சாலை வழியாக கோவிலின் முன்பு உள்ள புல்தரை வழியாக ராஜராஜன் கோபுரத்தின் உள்ளே சென்று வடக்கு பகுதியில் உள்ள மற்றொரு வாசல் வழியாக வெளியேறும் வகையிலும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் இது தொடர்பான இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கும்பாபிஷேக விழாவுக்காக பெரியகோவிலை வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

Next Story