‘திராவிட இயக்க உணர்வுகளை சிதைக்க முயற்சி நடக்கிறது’ - சேலத்தில் வைகோ பேட்டி


‘திராவிட இயக்க உணர்வுகளை சிதைக்க முயற்சி நடக்கிறது’ - சேலத்தில் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 25 Jan 2020 10:15 PM GMT (Updated: 26 Jan 2020 12:12 AM GMT)

‘திராவிட இயக்க உணர்வு களை சிதைக்க முயற்சி நடக்கிறது’ என்று சேலத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

சேலம்,

சேலம் கோட்டை மைதானத்தில் ம.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அள்ளித்தெளித்த கோலம் போல குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த குடியுரிமை சட்டம் ஆளுங்கட்சிக்கு கூட தெரியாமல் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் பல்வேறு போராட்டத்தை சந்தித்துள்ளது.

ஆனால் தற்போது மத்திய அரசு மூலம் பல்வேறு வடிவில் இந்தி திணிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை பெயரை கூட ஜல்சக்தி, ஆயிஷ் என்று மாற்றி வைத்துள்ளனர். மத்திய அரசு மும்மொழி திட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இப்படி பல பிரச்சினைகள் ஒரு பக்கம் உள்ள நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமாக டெல்டா பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர் வீணாகி விடும் ஆபத்து உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் பாலைவனமாக மாறி பட்டினி பிரதேச மாநிலமாக மாறும் சூழ்நிலை உருவாகும்.

மக்களுடைய நலனுக்காக 8 வழிச்சாலை எனக்கூறி கல்ராயன் மலை, சேர்வராயன் மலை, வேடியப்பன் மலை, கஞ்சமலை ஆகிய மலைகளில் உள்ள கனிம வளத்தை அழித்து, தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு கொண்டு வரும் வஞ்சகமான திட்டங்களுக்கு தமிழக அரசு கை கட்டி, வாய் பொத்தி சேவை செய்யும் அரசாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் பாதிப்புகளை உருவாக்கும் திட்டங்கள் குறித்து தமிழக அரசு கடிதம் எழுதுவதை தவிர, வேறொன்றும் செய்யவில்லை.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடு நடந்திருப்பது என்பது வெட்கப்பட வேண்டிய விசயமாகும். இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பெரியார் பற்றி ரஜினிகாந்த் தேவையில்லாத கருத்துகளை பதிவு செய்துள்ளார். இதனை அவர் தவிர்த்து இருக்கலாம். மறந்து போக வேண்டிய பிரச்சினையை இவர் ஏன் நினைவு படுத்தினார் என்று தெரியவில்லை. தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் திராவிட இயக்க உணர்வுகளை சிதைக்க முயற்சி நடக்கிறது. இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் பேசியது ஒன்றாக இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது.

இவ்வாறு வைகோ கூறினார்.

இதைத்தொடர்ந்து வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசும்போது, பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள், இந்தி திணிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்றிருக்கிறார்கள். அதேசமயம் பலர் தங்களது இன்னுயிர்களை நீத்திருக்கிறார்கள். கடந்த காலத்தின் தியாகம், வரலாற்றை யாரும் மறந்துவிடக்கூடாது. இந்தி தான் ஆட்சி மொழி என்றும், இனிமேல் நாடுமுழுவதும் இந்தி மொழி தான் இருக்கும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியுள்ளார். இதனால் மும்மொழி திட்டத்தை அமல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், என்றார்.

கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் ஆனந்தராஜ், கோபால்ராசு, மகேந்திர வர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story