தமிழகத்தில் உரிமைகளுக்காக போராடும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
தமிழகத்தில் உரிமைகளுக்காக போராடும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர்,
கரூர் 80 அடி சாலையில் மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் வீரவணக்க நாள் பொது கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் விவேகானந்தன் தலைமை வகித்தார். மாணவர் அணி தலைவர் வீரக்குமார் வரவேற்று பேசினார். நகரசெயலாளர்கள் நெடுஞ்செழியன், வி.சி.கே.ஜெயராஜ், பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தீய சக்திகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றியவர் எம்.ஜி.ஆர்., திண்டுக்கல்லில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்தே ஏறு முகம் தான். சினிமாவில் இருந்து வந்ததால் வென்று விடலாம் என பலரும் முயற்ச்சி செய்கிறார்கள். அவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது. கருணாநிதி இறந்தபோது 88 பஸ்களின் கண்ணாடிகளை உடைத்தார்கள். ஆனால் ஜெயலலிதா இறந்தபோது அமைதியாக இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்று உள்ளது. அதில் மகத்தான வெற்றி பெற்று இருக்கிறோம். தமிழகத்தில் அரசு நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது என நீதிபதிகள் கூறுகிறார்கள். அனைத்து துறைகளிலும் முதல் 6 இடங்களுக்குள் வந்து இருக்கிறோம் நிர்வாகத்தில் முதல் இடத்தில் இருந்து பரிசு பெற்று இருக்கிறோம். தமிழக அரசை குறை கூற தி.மு.க.வினருக்கு எந்த அருகதையும் கிடையாது. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்பட உள்ளது. நீர் மேலாண்மை திட்டம் எவ்வாறு செயல்படுத்துவது என பொறியாளர்களிடம் கலந்து ஆலோசித்து செயல்படுத்தி கொண்டுள்ளோம்.
புகளூரில் 1 டி.எம்.சி. தண்ணீர் தேங்கும் அளவிற்கு கதவணை அமைக்கப்பட உள்ளது. அதற்கான பூமிபூஜை அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தி.மு.க.வினர், அ.தி.மு.க.வில் இருந்து லீசுக்கு ஆட்களை அழைத்து சென்று கட்சி நடத்துகிறது. ஜெயலலிதா சொன்னதுபோல் அவருக்கு பிறகும் 100 ஆண்டுகள் இந்த ஆட்சி இருக்கும். தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடப்பதால் கேட்கும் திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் ஒரே இயக்கம் அ.தி.மு.க தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், பொருளாளர் கண்ணதாசன், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் திருவிகா, கரூர் ஒன்றிய குழு தலைவர் பால முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story