ரெயில் மோதி இறந்ததாக கருதப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: கொத்தனாரை கொன்று உடலை தண்டவாளத்தில் வீசியது அம்பலம்


ரெயில் மோதி இறந்ததாக கருதப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: கொத்தனாரை கொன்று உடலை தண்டவாளத்தில் வீசியது அம்பலம்
x
தினத்தந்தி 27 Jan 2020 4:15 AM IST (Updated: 27 Jan 2020 1:32 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே ரெயில் மோதி இறந்ததாக கருதப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, கொத்தனாரை கொன்று தண்டவாளத்தில் உடலை வீசியது அம்பலமாகி உள்ளது. இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே பள்ளியாடி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் கடந்த 24-ந் தேதி அன்று ஒரு வாலிபர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இலந்தையடி பகுதியை சேர்ந்த ஜாஸ்மின் ஜோ (வயது 29) என்பதும், அவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. ரெயில் மோதி ஜாஸ்மின் ஜோ இறந்திருக்கலாம் என கருதி போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஜாஸ்மின் ஜோ உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சில அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

அதாவது, பிரேத பரிசோதனையின் போது ஜாஸ்மின் ஜோ உடலில் கத்திக்குத்து காயம், கம்பியால் தாக்கிய காயம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மர்மநபர்கள் ஜாஸ்மின் ஜோவை கத்தியால் குத்தியும், கம்பியால் தாக்கியும் கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை தண்டவாளத்தில் வீசி விட்டு தப்பி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கொலையை மறைக்க மர்மநபர்கள், ஜாஸ்மின் ஜோவை ரெயில் மோதி இறந்தவர் போல் காட்டுவதற்காக தண்டவாளத்தில் உடலை வீசி இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் ஜாஸ்மின் ஜோ பற்றிய தகவலை போலீசார் விசாரிக்க தொடங்கி உள்ளனர். ஜாஸ்மின் ஜோ கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் வெளியான தகவலை தொடர்ந்து, நாகர்கோவில் ரெயில்வே போலீசார் அந்த வழக்கை தக்கலை போலீசாருக்கு மாற்ற உள்ளனர்.

மேலும் இந்த கொலை வழக்கில் தக்கலை போலீசார் உரிய விசாரணை நடத்தி ஜாஸ்மின் ஜோவை கொன்றவர்கள் யார்? எதற்காக கொன்றனர்? என்பதை துப்பு துலக்குவார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட ஜாஸ்மின் ஜோவுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரெயில் மோதி இறந்ததாக கருதப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக கொத்தனார் கொலை செய்யப்பட்டதாக வெளியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story