நகராட்சி விதித்துள்ள வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு: கடலூரில், கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்


நகராட்சி விதித்துள்ள வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு: கடலூரில், கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2020 4:30 AM IST (Updated: 28 Jan 2020 6:21 PM IST)
t-max-icont-min-icon

நகராட்சி விதித்துள்ள வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

கடலூர்,

கடலூர் நகராட்சிக்கு சொந்தமாக மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட், பஸ் நிலையம், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 650–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு அதன் அளவுக்கேற்ப நகராட்சி நிர்வாகம் சார்பில் வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கடைகளுக்கு பல மடங்கு வாடகை உயர்த்தப்பட்டது.

இதற்கிடையே வாடகை மற்றும் வரி செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடைக்காரர்கள் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டினர். இருப்பினும் நகராட்சி நிர்வாகம் உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த உத்தரவிட்டது.

ஆனால் உயர்த்தப்பட்ட வாடகை சந்தை மதிப்பை விட அதிகமாக உள்ளது. ஆகவே புதிதாக ஒரு குழு அமைத்து வாடகையை குறைத்து நியாயமான வாடகையை மறு சீராய்வு மூலம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நகராட்சி கடைகளை வைத்திருக்கும் வியாபாரிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய கடலூர் நகராட்சி வாடகைதாரர்கள் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.

மேலும் வாடகை உயர்வை கண்டித்து கடைகளை அடைத்து நகராட்சி ஆணையாளரிடம் மனு அளிப்பது என்றும் முடிவு செய்தனர். இதன்படி நேற்று கடலூர் நகராட்சி வாடகைதாரர்கள் கூட்டமைப்பினர் அனைத்து கடைகளையும் அடைத்தனர். பஸ் நிலையத்தில் அனைத்து கடைகளையும் வியாபாரிகள் அடைத்ததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதேபோல் பல்வேறு இடங்களில் நகராட்சி கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன.

பின்னர் அனைவரும் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். தொடர்ந்து அவர்கள் நகராட்சிக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். நகராட்சி நிர்வாகமே வாடகையை பன்மடங்கு உயர்த்தாதே, மறுசீராய்வு செய்து வாடகையை குறைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் மதிசேகர், பொருளாளர் பக்கீரான், கவுரவ தலைவர்கள் எழிலரசன், அயூப், அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ஜி.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் துணை தலைவர்கள் நாராயணன், அசோக், ஏகாம்பரம், துணை செயலாளர்கள் சந்திரன், சரவணன், சுகுமார், சட்ட ஆலோசகர்கள் ஏ.ஜி.ஆர்.சுந்தர், சலீம் மற்றும் திப்புசுல்தான், பரமசிவம், ரங்கநாதன், அன்பரசன், சுகுணன், சேகர், ஏ.ஜி.சம்பத், ஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் நகராட்சி அலுவலகத்துக்குள் சென்று மேலாளர் பழனியிடம் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்து விட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் பாரதி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்

Next Story