2 பேர் படுகொலை எதிரொலி: கைலாசப்பட்டியில் பதற்றம் நீடிப்பு - போலீஸ் குவிப்பு 33 பேர் மீது வழக்கு
கைலாசப்பட்டியில் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெரியகுளம்,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மற்றொரு சமூகத்தை சேர்ந்த மனோஜ் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள், புகார் கொடுத்த மனோஜ் வீட்டுக்கு சென்று தகராறு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் எதிரொலியாக நேற்று முன்தினம் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. அரிவாள், கம்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் இரு சமூகத்தை சேர்ந்தவர்களும் மோதிக்கொண்டனர்.
இந்த மோதலில் ஒரு சமூகத்தை சேர்ந்த ஈ.வெ.ரா. தெருவில் வசித்த ஜெயபால் (வயது 55) தாக்கப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதேபோல் மற்றொரு சமூகத்தை சேர்ந்த சுதந்திரவீதி நேதாஜி தெருவை சேர்ந்த பெருமாள் (70) மோதலில் இறந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெருமாளின் உறவினர்கள், கைலாசப்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் பெருமாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கைலாசப்பட்டியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் தேனி மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டனர். நேற்றும் அங்கும் பதற்றம் நீடித்ததால் போலீஸ் ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. ஜோஷிநிர்மல்குமார், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண்தேஜஸ்வி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெயபாலின் மகன் கங்காதேவா கொடுத்த புகாரின்பேரில் முருகன், அன்பழகன், சுரேந்தர், நாகராஜ், ராதா, மனோஜ், அருள்முருகன், சிவக்குமார், அபிமன்யூ, செல்வக்குமார், தங்கபழம், ராஜா, தங்கராஜ், சுரேஷ் உள்பட 20 பேர் மீதும், மற்றொரு சமூகத்தை சேர்ந்த பெருமாளின் மகன் துரைப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் கங்காதேவா, சிவதேசிங்கன், முத்துப்பிரியா, கமலாதேவி, கார்த்திக், பாண்டியம்மாள், அஜித், சுதா உள்பட 13 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஜெயபாலின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கைலாசப்பட்டிக்கு போலீசார் கொண்டு வந்தனர். பின்னர் இறுதிச்சடங்குக்கு பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதேபோல் பெருமாளின் உடலும், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கைலாசப்பட்டியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story