அரக்கோணம் பகுதியில் 2 பெண்களிடம் 8 பவுன் நகை பறிப்பு
அரக்கோணம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பெண்களிடம் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
அரக்கோணம்,
அரக்கோணம் சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 69), ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். அவருடைய மனைவி சசிகலா (55). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.
முபாரக் நகர் அருகே சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென சீனிவாசன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை மறித்தனர். பின்னர் அவர்கள் சசிகலா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல் அரக்கோணம் அருகே உள்ள இச்சிப்புத்தூர் காலனி, முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆஷா (25), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காவேரிப்பாக்கத்தில் நடந்த அலுவலக கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் இச்சிப்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தணிகைபோளூரை அடுத்த கண்டிகை கிராமம் அருகே சென்ற போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென ஆஷா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் மர்ம நபர்கள் ஆஷாவின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். இதனால் சுதாரித்துக்கொண்ட அவர் நகையை இறுக்கமாக பிடித்து கொண்டதால் நகை அறுந்தது. இதில் பாதி நகை மர்ம நபர்கள் கையிலும், மீதி நகை ஆஷா கையிலும் சிக்கியது.
இதனையடுத்து மர்ம நபர்கள் கிடைத்தது போதும் என்று ஆஷாவிடம் இருந்து பறித்த 1 பவுன் நகையுடன் தப்பி சென்றனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
இந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு கே.மனோகரன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story