அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கொலை மிரட்டல்: 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கொலை மிரட்டல்: 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 30 Jan 2020 4:00 AM IST (Updated: 29 Jan 2020 6:54 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் ஒன்றிய அ.தி.மு.க செயலாளருக்கு பயங்கர ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பசும்பொன்நகரை சேர்ந்த முனியாண்டி மகன் அசோக்குமார்(வயது47). ராமநாதபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராகவும், யூனியன் கவுன்சிலராகவும் உள்ளார். இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் யூனியன் 9–வது வார்டில் போட்டியிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது கடந்த 18–ந் தேதி ராமநாதபுரம் ரெயில்வே கேட் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து அசோக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் மகாசக்திநகர் முருகன் மகன் கண்ணன்(வயது23), எம்.எஸ்.கே.நகர் நாகராஜ் மகன் சம்பவம் கார்த்தி(23), ராமு மகன் அருண்குமார்(24), வீரபத்ரசாமிதெரு பாலசுப்பிரமணியன் மகன் தயாநிதி(21), ஓம்சக்திநகர் சேகர் மகன் உலகநாதன்(23) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

தப்பி ஓடிய நேருநகர் தங்கராஜ் மகன் முருகன்முரளிபாபு முன்ஜாமீன் பெற்றுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய எம்.எஸ்.கே.நகர் அருண்குமார் மற்றும் தயா என்ற தயாநிதி ஆகியோர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மேற்கண்ட இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று கலெக்டர் வீரராகவராவ் மேற்கண்ட இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அருண்குமார், தயாநிதி ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story