திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் 22-ந் தேதி திறப்பு - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் 22-ந் தேதி திறப்பு - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 30 Jan 2020 5:45 AM IST (Updated: 30 Jan 2020 1:04 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் வருகிற 22-ந் தேதி திறக்கப்படுகிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

திருச்செந்தூர், 

பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் 60 சென்ட் நிலத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ வெண்கல சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மணிமண்டபத்தில் பூங்கா, நூலகம் மற்றும் மணிமண்டபத்துக்கு வருகிற பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சங்கர், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் நேற்று காலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டு விடுதலைக்காக போராடிய தியாகிகளையும், வீரர்களையும், மொழிப்போர் தியாகிகளையும் பெருமைப்படுத்தும் வகையில், அவர்களுக்கு மணிமண்டபங்கள், நினைவு மண்டபங்களை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைத்து கவுரவித்தார். அவரது வழியில் ஆட்சி செய்து வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், நாட்டுக்கு உழைத்த சான்றோர்களுக்கும் மணிமண்டபம், நினைவு மண்டபங்களை அமைத்து கவுரவித்து வருகிறார்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பாமர மக்களும் தமிழ் படிக்க வேண்டும் என்பதற்காக, ‘தினத்தந்தி’ நாளிதழை தொடங்கி, தமிழ் படிக்க வைத்து தமிழுக்கு தொண்டாற்றினார். அவரது வழியில் அவரது மகனும், தென் மாவட்ட மக்களால் சின்னய்யா என்றும், கொடை வள்ளல் என்றும், ஆன்மிக செம்மல் என்றும் அன்போடு அழைக்கப்படுகின்ற டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்று, திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி மணிமண்டபம் சிறப்பாக கட்டப்பட்டு உள்ளது.

இந்த மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து திறக்க வேண்டும் என்று சிவந்தி ஆதித்தனாரின் குடும்பத்தினரும், இந்த பகுதி மக்களும் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூருக்கு நேரில் வந்து மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.

தென் மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு தென் மாவட்ட மக்கள் சார்பிலும், அ.தி.மு.க. சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். இதுவரையிலும் தென் மாவட்டத்தில் எந்த முதல்-அமைச்சருக்கும் அளிக்கப்படாத வகையில், மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பான விழாவாக அமையும்.

ஆதித்தனாரின் குடும்பத்தினர் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் சிறப்பாக தொண்டாற்றி உள்ளனர். தமிழுக்காக தியாகம் செய்த பாரம்பரியமிக்க குடும்பம் ஆகும். அவர்களது குடும்பத்தை இந்த பகுதி மக்கள் மிகவும் கவுரவிக்க கூடியவர்கள். தமிழ் தொண்டு செய்த குடும்பத்தை கவுரவிக்கும் விழாவாக இந்த விழா நடைபெறும். இந்த விழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள்.

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் இந்த விழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளோம். அரசு விழாவாக நடத்துவதால் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், திறப்பு விழா மேடை அமைக்கப்படும் இடத்தையும், கல்வெட்டையும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்.

இதையடுத்து டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அரங்கில், முதல்-அமைச்சரின் வருகை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சங்கர், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தலைமை தாங்கி, அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஆலோசனைகளை வழங்கினர். முதல்-அமைச்சரின் வருகையின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுரை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், உதவி கலெக்டர் தனப்பிரியா, தாசில்தார் ஞானராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, யூனியன் ஆணையாளர்கள் சந்தோஷ், ராமராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன், இளநிலை பொறியாளர் கணேசன், மின்வாரிய செயற்பொறியாளர் பொன் கருப்பசாமி,

நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் குற்றாலிங்கம், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சங்கர நாராயணன், மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர் தேவராஜ், குடிநீர் வடிகால்வாரிய நிர்வாக பொறியாளர் செந்தூர்பாண்டி, உதவி நிர்வாக பொறியாளர் கென்னடி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார், திருச்செந்தூர் யூனியன் தலைவி செல்வி வடமலை பாண்டியன், முன்னாள் தொகுதி செயலாளர் வடமலை பாண்டியன்,

அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் யூனியன் தலைவர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், முன்னாள் நகர செயலாளர் காயல் மவுலானா, அ.தி.மு.க. நகர செயலாளர் மகேந்திரன், காயல்பட்டினம் பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் பூந்தோட்டம் மனோகரன், வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து,

திருச்செந்தூர் யூனியன் துணை தலைவர் ரெஜினார்டு பர்னாந்து, ஆறுமுகநேரி நகர செயலாளர் அரசகுரு, திருச்செந்தூர் வக்கீல்கள் சங்க தலைவர் ஜேசுராஜ், ஆலந்தலை பங்குத்தந்தைகள் ஜெயகுமார், ரினோ, அ.தி.மு.க. பஞ்சாயத்து செயலாளர் ராகவ ஆதித்தன் (காயாமொழி), திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் திருப்பதி, ஆறுமுகநேரி குளம் விவசாயிகள் சங்க தலைவர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story