நெல்லை-தூத்துக்குடியில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கலாம் - உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் தகவல்


நெல்லை-தூத்துக்குடியில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கலாம் - உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 29 Jan 2020 11:00 PM GMT (Updated: 29 Jan 2020 8:00 PM GMT)

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் சஜ்ஜன் சிங் சவான் தெரிவித்தார்.

நெல்லை, 

தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சஜ்ஜன் சிங் சவான் நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ள ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

பின்னர் ஆணையர் சஜ்ஜன் சிங் சவான் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு எனப்படும் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் அமலுக்கு வருகிறது. இதுவரை ரேஷன் கார்டுகளுக்கு பதிவு செய்யப்பட்ட ஒரேயொரு ரேஷன் கடையில்தான் பொருட்கள் வாங்க வேண்டும். ஆனால், புதிய திட்டத்தின்கீழ் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.

தற்போது அனைவருக்கும் பழைய ரேஷன் கார்டுகள் மாற்றப்பட்டு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு உள்ளது. 100 சதவீதம் ஸ்மார்ட் கார்டு மூலமாகவே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கார்டு மூலம் பி.ஓ.எஸ். எந்திரத்தில் பதிவு செய்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த எந்திரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதால், ஸ்மார்ட் கார்டு மூலம் வாங்கப்படும் பொருட்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்த திட்டம் வீடு, ஊர் மாறுகிறவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். முன்பு இவ்வாறு இடம் மாறுகிறவர்கள் தங்களது ரேஷன் கார்டை தாலுகாவுக்கு சென்று நீக்கம் செய்து, புதிய இடத்தில் பதிவு செய்த பிறகே பொருட்கள் வாங்க முடியும். ஆனால், தற்போது இடமாறிய அடுத்த நாளே அங்குள்ள ரேஷன் கடையில் பொருட் களை வாங்கிக்கொள்ளலாம்.

நெல்லை மாவட்டத்தில் 789 ரேஷன் கடைகளும், 4,78,206 கார்டுகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 957 கடைகளும், 4,93,845 கார்டுகளும் உள்ளன. இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் 5 சதவீதம் பொருட்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்படும். இது தொடர்பாக 2 மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளுக்கும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது காணப்படும் குறை, நிறைகளை பார்த்து, சாப்ட்வேரில் என்ன சிக்கல் வருகிறது என்பதை பரிசோதனை செய்து அந்த பிரச்சினை சரிசெய்யப்படும். பின்னர் தேவையான திருத்தங்களுடன் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். அதைத்தொடர்ந்து மாநிலங்களுக்கு இடையே இந்த திட்டம் இணைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறுகையில், ‘ஒரே கார்டுக்கு வெவ்வேறு கடையில் வெவ்வேறு பொருட்கள்கூட பிரித்து வாங்கலாம். அதாவது இன்று ஒரு கடையில் அரிசியும், மற்றொரு கடையில் பாமாயில், மற்றொரு கடையில் சீனி வாங்கலாம்.

ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் ஒதுக்கீடு அதிகரிக்க முடியாது. அது மத்திய அரசு ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படுகிறது. இப்போதே எந்த கடையில், யார் வாங்குவார்கள் என்பது தெரியாது. திட்டம் அமலுக்கு வந்த உடன் எந்த கடையில் அதிகமாக வாங்குகிறார்கள் என்பதை ஆய்வு செய்து, அந்த கடைக்கு கூடுதல் பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த பணி குறித்து தினந்தோறும் ஆய்வு செய்யப்படும். இது தொடர்பாக மாவட்ட வழங்கல் அலுவலர், உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார்கள் ஆய்வு செய்வார்கள். தாலுகா என்ஜினீயர்கள் பி.ஓ.எஸ். எந்திரத்தில் குறைபாடு ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்வார்கள்‘ என்றார்.

Next Story