சப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் 2 பேருக்கு போலீஸ் காவல் நாளை முடிகிறது - ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய நடவடிக்கை
சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் 2 பேருக்கு போலீஸ் காவல் நாளையுடன் நிறைவடைகிறது. மேலும் ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் உள்ள சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு பணியில் இருந்தவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57). இவரை, திருவிதாங்கோடு அடப்புவிளை பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் (29), நாகர்கோவில் கோட்டார் இளங்கடை அருகில் உள்ள மாலிக்தினார் நகரை சேர்ந்த தவுபிக் (27) ஆகிய 2 பயங்கரவாதிகளும் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தனர்.
இதுகுறித்து களியக்காவிளை போலீசார் கொலை வழக்கு, உபா சட்டப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் 2 பேரையும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தற்போது இருவரையும் 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் போது, பயங்கரவாதிகள் தொடங்கிய ஐ.எஸ்.ஐ. (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இந்தியா) என்ற புதிய அமைப்பின் தொடக்கம், அதற்கு தலைமையாக இருந்து செயல்பட்டவர்கள் விவரம், தங்களது அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்ததால் போலீசாரை அச்சுறுத்தும் நோக்கத்தோடு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்த விவரம், குடியரசு தின விழாவில் அசம்பாவித சம்பவங்களை அரங்கேற்ற செய்திருந்த சதித்திட்டம், இதற்காக காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட ரகசிய கூட்டம், வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை வாங்கி கொடுத்தவர் பற்றிய தகவல், கொலை செய்த பிறகு அவர்கள் கேரளா, கர்நாடக மாநில பகுதிகளுக்கு சென்றது பற்றிய விவரம், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை வீசிய இடங்கள் போன்ற தகவல்கள் திரட்டப்பட்டன.
மேலும் கேரள மாநிலம் எர்ணாகுளம் பஸ் நிலையம் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் வீசி எறிந்த கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் வீசி எறிந்த கத்தி, நெய்யாற்றங்கரையில் அவர்கள் பயன்படுத்திய பேக் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள தவுபிக் வீட்டிலும், திருவிதாங்கூர் பகுதியில் உள்ள அப்துல் சமீம் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் போன்றவற்றுக்கான அறிக்கை தயாரிக்கும் பணியில் போலீசார் நேற்று முதல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் நெய்யாற்றங்கரையில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த பகுதி, சாப்பிட்ட ஓட்டல் போன்ற ஆதாரங்கள் தொடர்பாக அங்கிருந்த நபர்களிடம் போலீசார் எழுதி வாங்கியுள்ளனர். அதேபோல் பயங்கரவாதிகள் பயன்படுத்திய பேக்கை வைத்திருந்த நபரிடம் இருந்தும் சாட்சி அறிக்கை வாங்கியிருப்பதாக தெரிகிறது. பயங்கரவாதிகள் 2 பேருக்கும் போலீஸ் காவல் நாளை மாலையுடன் முடிவடைகிறது.
அதன்படி நாளை மாலை அவர்கள் 2 பேரும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்கள். அப்போது ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.வில்சன் கொலை வழக்கில் விசாரிக்க, போதிய கால அவகாசம் இல்லாததால் கேரள மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும், கர்நாடகா, மராட்டிய மாநில பகுதிகளுக்கும் பயங்கரவாதிகள் 2 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனவே அவர்களை நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது மேலும் காலஅவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகளும் குமரியில் முகாமிட்டு, பயங்கரவாதிகளிடம் குமரி மாவட்ட போலீசார் நடத்தி வரும் விசாரணையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இந்த வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடைந்தபிறகு இந்த வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற அதன் அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு கொண்டு செல்லப்பட்டால் வழக்கு விசாரணை நடைபெறும் கோர்ட்டும், பயங்கரவாதிகள் அடைக்கப்படும் ஜெயிலும் சென்னைக்கு மாற்றப்படும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story