சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலை மீண்டும் ஒத்திவைத்தது ஜனநாயக படுகொலை - பெரியகருப்பன் எம்.எல்.ஏ. பேட்டி


சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலை மீண்டும் ஒத்திவைத்தது ஜனநாயக படுகொலை - பெரியகருப்பன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 30 Jan 2020 10:15 PM GMT (Updated: 30 Jan 2020 1:25 PM GMT)

சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலை மீண்டும் ஒத்திவைத்தது ஜனநாயக படுகொலை என பெரியகருப்பன் எம்.எல்.ஏ. கூறினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. சிவகங்கையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்புவனம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 17 கவுன்சிலர்களில் தி.மு.க. கூட்டணியில் 11 பேர் உள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தலை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி 2-வது முறையாக ஒத்திவைத்துள்ளனர்.

இதேபோல் கடந்த 11-ந்தேதி சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற இருந்தது. அப்போது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 8 மாவட்ட கவுன்சிலர்கள் தேர்தலில் பங்கேற்க வந்தனர். ஆனால் அ.தி.மு.க. சார்பில் வெற்றிபெற்ற 8 மாவட்ட கவுன்சிலர்களும் தேர்தலில் கலந்துகொள்ளவில்லை. இதனால் தேர்தலை தேதி குறிப்பிடாமல் மாவட்ட தேர்தல் அதிகாரி ஒத்திவைத்தார்.

பின்னர் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் நேற்று நடைபெற இருந்தது. இந்தநிலையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் வெற்றிபெற்ற 8 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர். அ.தி.மு.க.வை சேர்ந்த 8 கவுன்சிலர்களில் ஒருவர் கூட தேர்தலில் பங்கேற்கவில்லை. இதனால் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மீண்டும் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இது ஜனநாயக படுகொலையாகும். இதற்கு மாவட்ட நிர்வாகமும் உதவி செய்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாவட்ட கவுன்சிலர் செந்தில் கூறும்போது, நாங்கள் காலை 10 மணிக்கு தேர்தலில் கலந்துகொள்ள வந்தோம். மாவட்ட கலெக்டர் 11 மணியளவில் வந்தார். பின்னர் தேர்தல் நடத்த போதுமான கவுன்சிலர்கள் இல்லாததால் தலைவர் தேர்தலை ஒத்திவைப்பதாக தெரிவித்தார். இதனால் நாங்கள் மதியம் நடைபெற இருந்த துணைத்தலைவர் தேர்தலை புறக்கணித்துவிட்டு வெளியேறினோம் என்றார்.

Next Story