கூடலூரில், சின்ன வெங்காயம் விலை குறைந்தது - கிலோ ரூ.60-க்கு விற்பனை


கூடலூரில், சின்ன வெங்காயம் விலை குறைந்தது - கிலோ ரூ.60-க்கு விற்பனை
x
தினத்தந்தி 31 Jan 2020 3:30 AM IST (Updated: 30 Jan 2020 10:03 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் சின்ன வெங்காயம் விலை குறைந்தது. கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கூடலூர்,

தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை நன்கு பெய்தது. அப்போது விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதம் அடைந்தது. இதனால் மார்க்கெட்டுகளில் வெங்காயம் வரத்து குறைந்தது. மேலும் நாடு முழுவதும் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200 வரையும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.150 வரையும் விற்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் சின்ன வெங்காயம் வரத்து இல்லை. மேலும் மக்களின் தேவைக்கு ஏற்ப பெரிய வெங்காயமும் கிடைக்கவில்லை. இதனால் வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை தடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன. மேலும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து எகிப்து உள்பட சில நாடுகளில் இருந்து மத்திய அரசு வெங்காயம் இறக்குமதி செய்தது. ஆனாலும் வெங்காயத்தின் விலை குறையவில்லை.

நீலகிரி மாவட்டத்தில் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர் என மலைப்பிரதேச காய்கறிகள் விளைகிறது. ஆனால் வெங்காயம் சமவெளி பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஆனால் தட்டுப்பாடு காரணமாக மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயம் வரத்து இல்லாமல் இருந்தது. இதற்கு பதிலாக பெரிய வெங்காயம் விற்கப்பட்டது. ஆனால் விலை உயர்வால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனால் வெங்காயம் இன்றி உணவு சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் மழைக்காலம் முடிவடைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெங்காயம் விளைச்சல் தொடங்கி உள்ளது. இதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து சின்ன வெங்காயம் வருகிறது. இதனால் கடந்த 2 மாதங்களாக நீலகிரி மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயம் இல்லாமல் இருந்த நிலை மாறி உள்ளது. தற்போது சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக வரலாறு காணாத வகையில் கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்டு வந்த சின்ன வெங்காயத்தின் விலை, தற்போது குறைந்து கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் பெரிய வெங்காயம் கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். கூடலூர் பகுதியில் மார்க்கெட்டுகள் மற்றும் நடைபாதை கடைகளில் சின்ன வெங்காயம் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளது. மேலும் விலையும் குறைந்து வருவதால் தோட்ட தொழிலாளர்கள் உள்பட பொதுமக்கள் சின்ன வெங்காயம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, கனமழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்ட சூழலில் தற்போது நன்கு விளைச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் சின்ன வெங்காயம் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளது. இன்னும் சில நாட்களில் விலை மேலும் குறைய அதிக வாய்ப்பு உள்ளது என்றனர்.

Next Story