காய்கறிகளை விற்க லஞ்சம் கேட்டதால் உழவர்சந்தை முன் பெண் விவசாயி தர்ணா
காய்கறிகளை விற்பனை செய்ய லஞ்சம் கேட்டதால், உழவர் சந்தை முன் பெண் விவசாயி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவை,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே மசக்கல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராணி (வயது 65). விவசாயி. இவர் கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய அடையாள அட்டை பெற்று இருந்தார்.
இந்தநிலையில், உழவர் சந்தையில் விளைபொருட்களை விற்பனை செய்ய ராணியிடம் அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் பணம் கொடுக்க மறுத்ததால் உழவர் சந்தைக்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ராணி காய்கறிகளை உழவர்சந்தை வாசலின் முன்பு வைத்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து பெண் விவசாயி ராணி கூறியதாவது:-
ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் சுய உதவி குழுக்கள் என்ற பெயரில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு காய்கறி கடைகளை வாடகைக்கு விட்டுள்ளனர். கடந்த 6 மாதமாக என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். பணம் கொடுக்காததால் ஊழியர்களை வைத்து என்னை உள்ளே அனுமதிப்பதில்லை.என்னிடம் பழைய அடையாள அட்டை மட்டுமே உள்ளது. புதிய அட்டை வழங்க மறுக்கிறார்கள். லஞ்சம் கொடுத்தால் தான் கடை வைக்க அனுமதிக் கின்றனர். இது குறித்து கலெக்டரிடம் முறையிட உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை முன் பெண் விவசாயி காய்கறி மூட்டைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story