சங்கரன்கோவில்-கடையநல்லூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்


சங்கரன்கோவில்-கடையநல்லூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2020 10:30 PM GMT (Updated: 30 Jan 2020 9:21 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நேற்று சங்கரன்கோவில், கடையநல்லூரில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில், 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நேற்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் தெற்கு ரதவீதியில் தொடங்கி அரசு விருந்தினர் மாளிகை வரை சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு ஏராளமானோர் மனித சங்கிலியாக அணிவகுத்து நின்றனர். அப்போது அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் சங்கரன், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் அசோக்குமார், அ.ம.மு.க. நகர செயலாளர் முப்பிடாதி, ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் முகமது ஹக்கீம், த.மா.கா. நகர தலைவர் முகமது அயூப், தே.மு..தி.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அயூப்கான், சங்கரன்கோவில் ஜமாத் கமிட்டி தலைவர் செய்யது இப்ராகிம், செயலாளர் சேனா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர்மைதீன், காங்கிரஸ் நகர தலைவர் உமாசங்கர், தொ.மு.ச. நிர்வாகி மைக்கேல் நெல்சன் மற்றும் பல்வேறு கட்சியினர், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். சங்கரன்கோவில் டவுன் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கடையநல்லூர்

கடையநல்லூரில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து நேற்று மனித சங்கிலி போராட்டத்தை நடத்தின. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ரஹ்மானியாபுரம் 1-வது தெருவில் இருந்து கடையநல்லூர் தாலுகா அலுவலகம் வரை மனித சங்கிலியாக கைகோர்த்து நின்றனர்.

இதில் கடையநல்லூர் எம்.எல்.ஏ. முகமது அபுபக்கர் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அ.ம.மு.க., தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டி, ஜமாத்துல் உலமா சபை, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில், கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story