பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற தாய் உள்பட 3 பேர் கைது
பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற தாய் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை பாந்திராவில் பச்சிளம் பெண் குழந்தையை விற்க ஒரு கும்பல் வரவுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்த பகுதியில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் வந்து நின்று கொண்டிருந்ததை கண்டனர். அந்த பெண்ணுடன் 2 பேர் இருந்தனர்.
இதையடுத்து போலீசார் போலி வாடிக்கையாளர் ஒருவரை அங்கு அனுப்பி விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண், குழந்தையை விற்க வந்தது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அந்த பெண் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் எனவும், கணவரை விட்டு பிரிந்த அவர் தனக்கு பிறந்த பெண் குழந்தையை ஏஜெண்ட்டுகளான முகமது பைசல் பட்டான், சரிபா பட்டான் ஆகியோரிடம் ரூ.50 ஆயிரத்திற்கு விற்க வந்தது தெரியவந்தது. விற்க முயன்ற குழந்தை பிறந்து 20 நாட்களே ஆனதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தாய் மற்றும் ஏஜெண்டுகள் 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story