கவர்னர் உரைக்கு இடையூறு செய்யும் எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள்; சபாநாயகர் எச்சரிக்கை


கவர்னர் உரைக்கு இடையூறு செய்யும் எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள்; சபாநாயகர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 31 Jan 2020 12:20 AM GMT (Updated: 31 Jan 2020 12:20 AM GMT)

சட்டசபையில் கவர்னர் உரைக்கு இடையூறு செய்யும் எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் அடுத்த மாதம்(பிப்ரவரி) 17-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் வருகிற 17-ந் தேதி நடைபெறும் கூட்டு கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரள சட்டசபை கூட்டத்தொடரின் போது கவர்னர் உரையாற்றிய சமயத்தில் எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இடையூறு ஏற்படுத்தினர்.

அதுபோன்று, கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரின் போதும் கவர்னர் உரையாற்றும் சமயத்தில் எம்.எல்.ஏ.க்கள் எந்த ஒரு இடையூறும் செய்யாமல் இருக்க சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்டே காகேரி அதிரடி முடிவு எடுத்துள்ளார். அதன்படி, கவர்னர் உரைக்கு இடையூறு செய்யும் எம்.எல்.ஏ.க்கள் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சபாநாயகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘பிப்ரவரி 17-ந் தேதி கா்நாடக சட்டசபையில் நடைபெறும் கூட்டு கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்ற இருக்கிறார். சட்டசபையின் 26-வது விதியின்படி கவர்னர் உரையின் போது எம்.எல்.ஏ.க்கள் எந்த ஒரு இடையூறும் செய்யக்கூடாது. அவ்வாறு சபையின் விதிமுறைகளை மீறி கவர்னர் உரைக்கு இடையூறு செய்யும் எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள்’’, என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் உரையின் போது போராட்டம் நடத்தலாம் என்பதால் முன் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை சபாநாயகர் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Next Story