சோளிங்கர் அருகே, சிலிண்டர் வெடித்து படுகாயம் அடைந்த 2 பேர் சாவு
சோளிங்கர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து படுகாயம் அடைந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சோளிங்கர்,
ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 25). ஊர் ஊராக சென்று கியாஸ் அடுப்பு சரிசெய்யும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தில், அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள நடராஜன் (65) என்பவருடைய வீட்டுக்கு கடந்த 29-ந் தேதி காளியப்பன் அடுப்பு சரிசெய்ய சென்றார்.
வீட்டில் நடராஜன், அவருடைய மனைவி அன்னியம்மாள் (60) ஆகியோர் இருந்தனர். கியாஸ் அடுப்பு சரிசெய்யப்பட்டதும் அடுப்பு சரியாக எரிகிறதா என்று பரிசோதித்து பார்த்தார். அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இந்த நேரத்தில் வீட்டின் தளமும் இடிந்துவிழுந்தது. இதில் நடராஜன், அன்னியம்மாள், காளியப்பன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். சிலிண்டர் வெடித்த நேரத்தில் பள்ளியில் சோளிங்கரை சேர்ந்த ஆங்கில ஆசிரியை முல்லை (45) என்பவர் சுற்றுச்சுவரின் ஓரத்தில் அமர்ந்திருந்தார்.
சிலிண்டர் வெடித்ததில் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து ஆசிரியை முல்லை மீது விழுந்தது. இதில் அவரும் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து ஆசிரியை முல்லை மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கும், நடராஜன், அன்னியம்மாள், காளியப்பன் ஆகிய 3 பேரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப் பட்டனர்.
பின்னர் அங்கிருந்து நடராஜன், அன்னியம்மாள், காளியப்பன் ஆகிய 3 பேரும் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காளியப்பன், நடராஜன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொடர்ந்து அன்னியம்மாள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கொண்டப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story