மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல்: ஏழை மக்கள், விவசாயிகள் நலனுக்கான பட்ஜெட்; முதல்-மந்திரி எடியூரப்பா வரவேற்பு
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா, ஏழை மக்கள், விவசாயிகள் நலனுக்கான பட்ஜெட் என்று கூறியுள்ளார்.
பெங்களூரு,
மத்திய பட்ஜெட் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட்டில் கிராமங்கள், விவசாயிகள், ஏழை மக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் இந்த பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
100 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பயன் அளிக்கும். தரிசு நிலத்தில் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி, 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரியசக்தியில் ஓடும் பம்பு செட்டுகள் வழங்குதல், விவசாயிகள் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பது போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும்.
விவசாய விளைபொருட்களை கொண்டு செல்ல வசதியாக கிசான் ரெயில், கிசான் விமான சேைவயை தொடங்கும் திட்டம் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைக்கும். விவசாயத்துறைக்கு ரூ.2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காசநோய் அடியோடு அகற்றுதல், மலிவு விலை மருந்தகங்களை தொடங்குதல், பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் கடன் பெற அனுமதி வழங்குவது, கல்வித்துறையில் பன்னாட்டு நேரடி முதலீட்டுக்கு அனுமதி போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கது.
ஆன்லைன் மூலம் கல்வி கற்று பட்டம் பெறும் திட்டத்தை அறிவித்திருப்பது மிக முக்கியமான ஒன்று. வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. உற்பத்தி துறை, ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.18 ஆயிரத்து 600 கோடி செலவில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருப்பதை நான் வரவேற்கிறேன். இந்த திட்டத்தில் மத்திய-மாநில அரசுகள் தலா 20 சதவீதமும் மீதமுள்ள 60 சதவீதம் கடனாக பெறப்படும். இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
வருமான வரி, தனியார் நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கலுக்கு புதிய முறையை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்த தேசிய நியமன ஆணையம் ஒன்றை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன். மொத்தத்தில் இந்த மத்திய பட்ஜெட், ஏழைகள், விவசாயிகள் நலன் சார்ந்த பட்ஜெட் ஆகும். இதற்காக பிரதமர் மற்றும் நிதி மந்திரிக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story