கரூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்


கரூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Feb 2020 11:00 PM GMT (Updated: 4 Feb 2020 5:45 PM GMT)

கரூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

வெள்ளியணை,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மரக்கார வீதியை சேர்ந்தவர் முருக பாண்டியன் (வயது 38). இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் சுற்றுலா செல்ல விரும்பிய முருக பாண்டியன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 18 பேருடன் கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி வாடகை வேனில் காரைக்காலில் இருந்து புறப்பட்டு, கொடைக்கானல் சென்றனர். வேனை காரைக்கால் என்.எம்.ஜி. நகர் குறுக்குத்தெருவை சேர்ந்த கார்த்திக் (30) ஓட்டினார். கொடைக்கானலில் பல்ேவறு இடங்களை சுற்றிபார்த்துவிட்டு பின் கேரளா சென்று முக்கியமான பகுதிகளை பார்வையிட்டு மகிழ்ந்தனர். அதன்பிறகு கேரளாவிலிருந்து மீண்டும் காரைக்காலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

ஒருவர் பலி

வேன் நேற்று அதிகாலை கரூர் மாவட்டம் புலியூர் அருகே உள்ள குளத்துப்பாளையத்தில் உள்ள கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்்தவர்கள், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டனர்.

இதை பார்த்த, அந்த வழியாக சென்றவர்கள் வேனில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தகவல் வெள்ளியணை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களும் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முருக பாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

5 பேர் படுகாயம்

மேலும் அவருடைய மனைவி லட்சுமி (34), பிரேம்குமார் (33), சுகன்யா (32), தமிழரசி (52), சுமித்ரா பத்மினி (38) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயம் அடைந்த மற்றவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story