போட்டி அரசாங்கத்தை நான் நடத்தவில்லை கவர்னர் கிரண்பெடி திட்டவட்டம்
புதுவையில் போட்டி அரசாங்கத்தை நான் நடத்தவில்லை என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் மாளிகை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பத்திரிகைகளில் வரும் செய்திகளின் தலைப்பினை கொண்டு செய்திகள் ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்படுகிறது. 3-வது ஆண்டாக தயாரிக்கப்பட்ட அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அதை கவர்னரின் சிறப்பு பணி அதிகாரி தேவநீதிதாஸ், தனிச்செயலாளர் ஸ்ரீதரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:-
போட்டி அரசாங்கம்
கவர்னர் மாளிகை சார்பில் நாள்தோறும் சவால்களை எதிர்கொள்கிறோம். புதுவைக்கு நான் நிரந்தரமானவள் அல்ல. நான் பொதுமக்களுக்கு சேவை செய்ய இங்கு வந்துள்ளேன். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டே நான் செயல்படுகிறேன். போட்டி அரசாங்கம் எதையும் நான் நடத்தவில்லை.
நிதி அதிகாரி
மாநில கவர்னர்களுக்கான அதிகாரம் எனக்கு கிடையாது. எனது பதவிக்காலத்தில் தவறு செய்தால் என்மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது.
நிதி அதிகாரம் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. நிதியை கையாளுவதில் மிகப்பெரிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனவே அதில் நான் மிகவும் கவனமாக உள்ளேன்.
மாநில தேர்தல் ஆணையர்
புதுவையில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதன்பின்பு சுப்ரீம் கோர்ட்டு உள்ளது.
புதுவை அமைச்சரவையுடன் கருத்து வேற்றுமை தொடர்புடைய விஷயங்கள் மத்திய உள்துறைக்கு அனுப்பப்படுகிறது. உள்துறையானது வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட விஷயங்களில் எனது முடிவுக்கு மாறாக அரசின் முடிவினை ஆதரித்தது. தற்போது மாநில தேர்தல் ஆணையர் விவகாரத்தில் எனது முடிவினை ஏற்றுக்கொண்டது.
இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.
முடிவில் மக்கள் தொடர்பு அதிகாரி குமரன் நன்றி கூறினார்.
ஏனாம் பயணம்
இந்த நிலையில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி 2 நாள் அரசுமுறை பயணமாக ஏனாம் சென்றுள்ளார். அங்கு பொதுமக்களை சந்தித்து குறைகேட்கிறார். இதற்காக அவர் நேற்று மாலை புதுவையில் இருந்து ரெயில் மூலம் புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story