மானிய விலையில் வழங்கப்படுகின்றன: மாவட்டம் முழுவதும் நவீன முறையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டம் - கலெக்டர் ஷில்பா தகவல்


மானிய விலையில் வழங்கப்படுகின்றன: மாவட்டம் முழுவதும் நவீன முறையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டம் - கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 6 Feb 2020 1:15 AM GMT (Updated: 6 Feb 2020 1:07 AM GMT)

நெல்லை மாவட்டம் முழுவதும் நவீன முறையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. பல்வேறு பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகள் அந்தந்த பகுதி பஞ்சாயத்துகள் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நெல்லையை அடுத்த பிராஞ்சேரியில் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மரங்கள் பூமித்தாயின் நுரையீரல்கள் என்று அழைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு மரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மரங்கள் மூலம் தேவையாள அளவுக்கு மழை கிடைக்கிறது.

மரங்களை வளர்ப்பதற்கு முன்னோடியாக தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலக வளாகங்களிலும் மரக்கன்று நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

மண் மற்றும் உரம் கலந்து பிளாஸ்டிக் குழாய் பதித்து குழி எடுத்து நவீன முறையில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு நட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மூலமாகவும் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

மா, பலா, புங்கை, புளி, மருதம், வேம்பு, கொய்யா, நெல்லி, தேக்கு உள்ளிட்ட 7,500 மரக்கன்றுகள் கடந்த மூன்று மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அந்த மரக்கன்றுகள் நடவு செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளன. இந்த நவீன முறையில் அதிக அளவு மரக்கன்றுகள் மாவட்டம் முழுவதும் உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு மக்களின் நலனை காப்பதற்காகவும், மழை பெருவதற்காகவும் ஆண்டுக்கு 60 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மானிய விலையில் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. மரங்களின் அவசியத்தை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு அவற்றை நட்டு பேணி பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சேரன்மாதேவி உதவி-கலெக்டர் பிரதீப் தயாள், தாசில்தார் வீரபுத்திரன், கோபாலசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story