நல்ல மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்; டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேச்சு


நல்ல மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்; டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேச்சு
x
தினத்தந்தி 8 Feb 2020 10:15 PM GMT (Updated: 8 Feb 2020 1:40 PM GMT)

நல்ல மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

குழித்துறை, 

மார்த்தாண்டத்தில் உள்ள நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில், கிராமப்புற கல்லூரி முதல்வர்களுக்கு தேசிய அளவில் தலைமைத்துவ பயிற்சி முகாம் 3 நாள் நடந்தது. முதல் நாள் தொடக்க நிகழ்ச்சிக்கு குமரி சி.எஸ்.ஐ. பேராயர் செல்லையா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பால்ராஜ் வரவேற்றார். கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் அஜய்குமார் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். யுனைடெட் போர்டு தெற்காசிய திட்ட இயக்குனர் மா கெர் ஸ்பர்ஜன் முகாமை அறிமுகப்படுத்தி பேசினார். கல்லூரி தாளாளர் ராஜதுரை வாழ்த்தி பேசினார். அமைப்புக்குழு அமைப்பாளர் சாம் இம்மானுவேல் நன்றி கூறினார்.

நேற்று 3–வது நாள் பயிற்சி முகாம் நடந்தது. இதில் தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

கல்லூரி முதல்வர்கள் தங்கள் பணியை உத்வேகத்துடன் செய்ய வேண்டும். மேலும் அவர்கள் அனைவரையும் அரவணைப்பவர்களாகவும், இரக்க சிந்தனை உள்ளவர்களாகவும் விளங்க வேண்டும். எப்போதும் மலர்ந்து முகத்துடன் இருக்க வேண்டும். ஆசிரியர்களை மதித்து, மாணவர்களிடம் அன்பு செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

வகுப்பில் மாணவர்கள் ஆர்வமுடன் கல்வியை கற்பதற்கு ஏற்ற சூழ்நிலையை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். ஆசிரியர் பணி என்பது சிறப்பானது. எனவே ஆசிரியர்கள் இதை வருவாய் ஈட்டும் பணியாக கருதாமல், நல்ல மாணவர்களை உருவாக்கும் வகையில் செயல்பட வேண்டும். தங்கள் திறமைகளை வெளிப்படுத்துபவர்களாக திகழ வேண்டும். இது ஒரு நாளில் முடியாது. தொடர் முயற்சியில் தான் செய்ய முடியும்.

அதற்காக ஆசிரியர்கள் தங்கள் திறமைகளை தொடர்ச்சியாக புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு தினமும் புத்தகங்களை வாசிக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் திறமைகளை வாசித்தல், எழுதுதல், கற்பித்தல் என வளர்த்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு எழுதிய “குட் டீச்சர் டூ கிரேட் டீச்சர்“ என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது.

முடிவில் முகாம் அமைப்புக்குழு செயலாளர் டேவிட் சாமுவேல் நன்றி கூறினார்.

இதில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஐசக் மோகன்லால், கல்லூரி முதல்வர் பால்ராஜ், தாளாளர் ராஜதுரை, துணை முதல்வர் பிஜி, முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமை கல்லூரியுடன், நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் யுனைடெட் போர்டு என்ற அமைப்பு இணைந்து நடத்தியது.

Next Story