வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்


வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Feb 2020 10:30 PM GMT (Updated: 9 Feb 2020 7:07 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் இல்லாதவாறு கண் காணிக்க வேண்டும் என உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர் சவான் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் முன்னிலை வகித்தார். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான சஜ்ஜன்சிங் ஆர் சவான் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வரின் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், இறந்த அல்லது இடம் பெயர்ந்த வாக்காளரது பெயரினை நீக்கம் செய்வதற்கும், முகவரியில் திருத்தம் செய்வதற்கும் விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 22-ந்தேதி வரை 37 ஆயிரத்து 496 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இரட்டை பதிவுகள்

இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளதால் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் விண்ணப்பங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினகரன், உதவி கலெக்டர்கள் ஜெயப்பிரித்தா (திருவாரூர்), புன்னியகோட்டி (மன்னார்குடி), தனி தாசில்தார் (தேர்தல்) சொக்கநாதன் மற்றும் தாசில்தார்கள், நகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.


Next Story