குடியாத்தம் அருகே, மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை யானைகள் துரத்தியதில் 6 பேர் காயம்


குடியாத்தம் அருகே, மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை யானைகள் துரத்தியதில் 6 பேர் காயம்
x
தினத்தந்தி 10 Feb 2020 3:45 AM IST (Updated: 10 Feb 2020 1:47 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை காட்டு யானைகள் துரத்திச்சென்றன. இதனால் மோட்டார்சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு ஓட்டம் பிடித்த 6 பேர் தடுமாறி விழுந்ததில் காயம் அடைந்தனர்.

குடியாத்தம்,

குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மோர்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, மோடிகுப்பம், தனகொண்டபல்லி, கல்லப்பாடி அருகேஉள்ளஅனுப்பு, கதிர்குளம், டி.பி.பாளையம், கொத்தூர், வீரிசெட்டிபல்லி, துருகம் உள்ளிட்ட இடங்கள் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ளது.

இந்த பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குழுக்களாக பிரிந்து விளைநிலங்களில் உள்ள பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. வனத்துறையினரும், கிராம பொதுமக்களும் காட்டு யானைகளை பட்டாசு வெடித்தும், மேளங்கள் அடித்தும் காட்டிற்குள் விரட்டி வருகின்றனர்.

இருப்பினும் கண்ணாமூச்சி காட்டும் யானைகள் இரவு வேளைகளில் தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து கிரு‌‌ஷ்ணகிரியில் இருந்து 10 பேர் கொண்ட பயிற்சி பெற்ற யானை தடுப்பு காவலர் குழுவினர் குடியாத்தத்திற்கு வந்தனர். அவர்கள் வனத்துறையினருடன் இணைந்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்லப்பாடியை அடுத்த அனுப்பு பகுதியில் உள்ள மணி என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலைக்குள் புகுந்த ஒரு யானை அங்கிருந்த 2 நெல் மூட்டைகளை திண்றது. மேலும் ஒரு நெல் மூட்டையை தூக்கிச் சென்றது.

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் அந்த யானையை காட்டுக்குள் விரட்டினர்.

கொத்தூர் கிராமத்தை சேர்ந்த 6 பேர் நேற்று முன்தினம் இரவில் 3 மோட்டார் சைக்கிளில் சாமிரெட்டிபள்ளி-அரிகவாரிபள்ளி வழியாக கொத்தூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

கொல்லப்பள்ளி அருேக அவர்கள் சென்றபோது 3 காட்டு யானைகள் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை வழிமறித்தன. அதிர்ச்சியில் உறைந்த அவர்களை நோக்கி யானைகள் வேகமாக வந்தன. இதனால் அவர்கள் மோட்டார்சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். வழியில் அவர்கள் தடுமாறி விழுந்ததில் 6 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இது குறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் வனவர் முருகன் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், தீப்பந்தங்களை கொளுத்தியும் காட்டு யானைகளை விரட்டினர். அதைத் தொடர்ந்து அவர்கள் மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

தனகொண்டபல்லியில் குத்துஸ் என்பவருக்கு சொந்தமான வாழைதோட்டத்திற்குள் புகுந்த 2 யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தியது.

Next Story