மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: சேர்வைக்காரன் மடத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் - கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: சேர்வைக்காரன் மடத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் - கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Feb 2020 11:15 PM GMT (Updated: 10 Feb 2020 9:02 PM GMT)

சேர்வைக்காரன்மடத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சேர்வைக்காரன்மடத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் காமராஜர் நகரில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் அரசு டாஸ்மாக் கடை புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பெண்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எனவே அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மற்றொரு டாஸ்மாக் கடையையும் அகற்ற வேண்டும். அதேபோல் எங்கள் ஊரில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகளில் இருந்து லாரிகளில் தண்ணீர் எடுப்பதையும் நிறுத்த வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஆழ்வார்திருநகரி ஒன்றிய தலைவர் ஜவஹர் கொடுத்த மனுவில், ஏரல் தாலுகா அங்கமங்கலம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பூர் நகர பகுதியில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான நாய், மற்றும் தெரு நாய்களுக்கு சில மாதங்களாக மர்ம நோய் தாக்கி உள்ளது. இதனால் நாய்கள் புண் வந்து, முடிகள் உதிர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரமேஷ் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகும், ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு பட்டியல், விலைப்பட்டியல்கள் வைக்கப்படவில்லை. எனவே அவைகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும். அதேபோல் மண்எண்ணெய் வழங்குவதில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கிராமத்தை சேர்ந்த மாடசாமி மற்றும் அனிஷ் மெல்வின் ஆகியோர் கிராம மக்கள் நலக்குழு சார்பில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் எங்கள் ஊரில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. அப்போது மிகவும் குறைந்த அளவில் தான் மக்கள் கலந்து கொண்டனர். இதனால் நாங்கள் கூட்டத்தை மற்றொரு நாள் நடத்த வேண்டும் என்று கூறினோம். ஆனால் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலை கேட்டு இருந்தோம். அந்த நகல் 2 நாட்களுக்கு பிறகு எங்களுக்கு கிடைத்தது. அதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டதாக அவர்களின் கையெழுத்து போலியாக இணைக்கப்பட்டு இருந்தது. எனவே இந்த கிராமசபை கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து மற்றொரு நாளில் கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

கயத்தாறு தாலுகா கொப்பம்பட்டியை சேர்ந்த பெண்கள் பலர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், நாங்கள் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். நாங்கள் வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட சிவத்தையாபுரம் சாமிகோவில் தெருவை சேர்ந்த பாலசிங் என்பவர் கொடுத்த மனுவில், ஏரல் தாலுகா சாயர்புரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நீர்பிடி புறம்போக்கு இடத்தில் அதிகாரி ஒருவர் மணல் வியாபாரிகளிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு அவர்களுக்கு 9 ஏக்கர் அரசு நீர்பிடி புறம்போக்கு இடத்தில் பாதை அமைத்து கொடுத்து உள்ளார். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓட்டப்பிடாரம் தாலுகா எம்.மீனாட்சிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊர் கயத்தாறு-எப்போதும் வென்றான் சாலையில் பசுவந்தனை அருகே உள்ளது. கயத்தாறு பிரதான சாலையில் எம்.மீனாட்சிபுரம் கிராம இணைப்பு சாலை சேரும் இடத்தில் சாலை மிகவும் உயரமாக உள்ளது. மேலும் அங்கு அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடம், வரும் வாகனங்களுக்கு தெரியாதவாறு மறைவாக அமைக்கப்பட்டு உள்ளது. சாலை உயரமாக இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி சமர்வியஸ் நகரை சேர்ந்தவர் சுசீலா என்ற மூதாட்டி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், எனக்கு 3 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர். முதல் 2 மகன்கள் எனக்கு 17 ஆண்டுகளாக எந்த உதவியும் செய்யவில்லை. 3-வது மகன் சுரேஷ் மளிகை கடை வைத்து உள்ளார். அவர் கடையில் நான் வேலை பார்த்து வந்தேன். மேலும் நான் வைத்திருந்த பணத்தில் ஒரு வீடு கட்டி கொடுத்தேன். வயதான பின்னர் நான் அந்த வீட்டில் தங்கி இருந்தேன். தற்போது 3 மகன்களும் சேர்ந்து அந்த வீட்டை இடித்து புதிதாக வீடு கட்ட போகிறோம் என்று கூறி என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விட்டனர். இதனால் தற்போது நான் உணவு இன்றியும் தங்க இடமின்றியும் கஷ்டப்பட்டு வருகிறேன். எனது கடைசி காலத்தில் நான் வாங்கிய வீட்டில் இருக்க மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்.

Next Story